puducherry assembly governor order congress, bjp parties

Advertisment

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைஉறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 33. இதில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; மூன்று உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்கள் ஆவர். அதில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், இரு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

தற்போதைய நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், 3 தி.மு.க. உறுப்பினர்கள், 1 சுயேச்சை உறுப்பினர் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. அதேபோல், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமிக்கு 7 என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள், 4 அ.தி.மு.க. உறுப்பினர்கள், 3 பா.ஜ.க. உறுப்பினர்கள் என மொத்தம் 14 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க அம்மாநில துணைநிலை ஆளுநரும் (பொறுப்பு), தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், அம்மாநில முதல்வருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்யவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

puducherry assembly governor order congress, bjp parties

ஆளுநரின் உத்தரவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன்படி, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான என்.ஆர்.ரங்கசாமி, "புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில், இது எப்படி பழிவாங்கும் நடவடிக்கையாகும்? நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு வாக்குரிமை இல்லை என எப்படிக் கூறமுடியும்? புதுச்சேரி அரசுக்குப் பெரும்பான்மை இல்லாவிடில் ராஜினாமா செய்துவிட்டுச் செல்ல வேண்டும்" என்றார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா கூறியதாவது, "ஆட்சியைக் கவிழ்க்கத் திட்டமிட்டு ஆளுநரை கூடுதல் பொறுப்பாக மத்திய அரசு நியமித்துள்ளது. புதுச்சேரியில் பின்வாசல் வழியாக வர நினைப்பவர்கள் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்வோம்" என்றார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் கூறியதாவது, "புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை வரவேற்கிறோம். தாமாக முன்வந்து முதல்வர் நாராயணசாமி ராஜினாமா செய்திருக்கவேண்டும். பெரும்பான்மை இருப்பதாக சவால்விட்ட நாராயணசாமி அதை நிரூபித்துக் காட்ட வேண்டும்" என்றார்.

puducherry assembly governor order congress, bjp parties

பா.ஜ.க.வின் நமச்சிவாயம் கூறியதாவது, "சபாநாயகர் என்பவர் பொதுவானவர்; அவரையும் எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது? புதுச்சேரி அரசு சட்டரீதியாகச் சென்றால் அதை எதிர்கொள்ள நாங்களும் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி கூறியதாவது, "பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததில் மத்திய அரசின் உள்நோக்கம் இருக்கிறது. ஆளுநரின் உத்தரவு தொடர்பாக முதல்வர் நாராயணசாமியுடன் ஆலோசிக்க உள்ளோம். எங்களுக்குச் சாதகமான முடிவுகள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்க உள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு நீடிக்குமா? அல்லது கவிழுமா? என்பது பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று தெரியவரும். புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் ஒருபுறம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், துணைநிலை ஆளுநரின் உத்தரவு அம்மாநில காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.