ADVERTISEMENT

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் எளிமையாக நடந்த பொங்கல் வழிபாடு!

10:01 PM Feb 17, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் நடக்கும் 10 நாட்கள் திருவிழாவில் 9ஆவது நாள் மகம் நட்சத்திரத்தில் நடக்கும் பொங்கல் திருவிழா என்பது உலக பிரசித்த பெற்றதாகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பெண்கள் கோயிலைச் சுற்றிப் பொங்கல் இட்டு வருவது வழக்கம். இது ஆண்டுதோறும் அதிகரித்து கோயிலிலிருந்து 15 கி.மீ. சுற்றளவில் பொங்கல் போடுவது நடைமுறையிலிருந்து வருகிறது.

அதேபோக கேரளாவின் பிற மாவட்டங்களிலும் அதே நாளில் பல பகுதிகளில் பெண்கள் பொங்கல் இடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் 2020- ல் நடந்த திருவிழாவின் போது 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டது கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக அடுத்த ஆண்டு அதாவது 2021-ல் 43 லட்சம் பெண்கள் பொங்கலிடுவார்கள் என்று கோயில் நிர்வாகம் கருதியது.

ஆனால் கரோனா தாக்கத்தால் 2021-ல் பொங்கலிடுவதற்கு அரசு அனுமதிக்காததால், கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி பண்டார பானையில் மட்டும் கோயில் போற்றிகள் பொங்கலிட்டு வழிபட்டனர். அதே போல் இந்த ஆண்டு திருவிழா பிப்ரவரி 9- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து குத்தியோட்டத்துக்கான சிறுவர்களுக்குக் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தினமும் பூஜைகள் நடந்து வந்தது.

இந்த நிலையில், இன்று (17/02/2022) 9ஆவது நாள் திருவிழாவான பொங்கல் விழா நடத்துவதற்கு அரசு அனுமதிக்காததோடு, மேலும் பொது இடங்களில் பொங்கலிடத் தடை விதித்து அவரவர் வீட்டு வளாகத்தில் பொங்கலிடுங்கள் என்று அறிவித்தது. இதை தொடர்ந்து கோயில் வளாகத்தில் சம்பிரதாயப்படி காலை 10.50 மணிக்குக் கோயில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரிப்பாடு ஸ்ரீ கோயிலிலிருந்து விளக்கில் தீபம் எடுத்து வந்து மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரியிடம் கொடுத்து, அவர் பண்டார அடுப்பில் பற்ற வைத்துப் பொங்கல் வழிப்பாட்டைத் தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஆற்றுக்கால் பகவதி அம்மன் பக்தர்கள் அவரவர் வீடுகளில் "அம்மே நாராயணா" "தேவி நாராயாணா" என்ற மந்திரத்துடன் பொங்கலிட்டு வழிப்பட்டனர். மதியம் 01.20 மணிக்கு பொங்கல் நிவேத்தியம் வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட பூசாரிகளால் வீடுகளுக்குச் சென்று நிவேத்திய சடங்குகளை நிறைவேற்றினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT