சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசத்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூரஆழியில் தீபம்ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக 13 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சென்னை, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால் டிசம்பர் 26 முதல்டிசம்பர் 29 வரை பேருந்துகள் இயக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.