ADVERTISEMENT

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. பேச்சுவார்த்தை!

05:45 PM Mar 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.ஆர்.ரங்கசாமி நேற்று (02/03/2021) தனது கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனையில் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி தொடரலாமா அல்லது தனித்துப் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமியை பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், பா.ஜ.க. எம்.பி. ராஜூசந்திர ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது, பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்க வேண்டும் என ரங்கசாமி உறுதியுடன் தெரிவித்துக் கொண்டதாக தகவல் கூறுகின்றன.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், "என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார்.

இதனிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி கூறுகையில், "சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு பற்றி கட்சியினருடன் ஆலோசித்து வருகிறோம். புதுச்சேரியில் தனித்துப் போட்டியா? பா.ஜ.க.வுடன் கூட்டணியா? என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும்" என்றார்.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த நிர்வாகிகள் விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ள நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைமையிலான கூட்டணி புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறுகின்றன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT