Puducherry Cm should leave the BJP alliance and resign dmk mla

புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் வழங்காத நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (10/08/2022) துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

Advertisment

கூட்டம் தொடங்கியதும் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாதது, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, வேலைவாய்ப்பின்மை, மின்துறை தனியார் மயம், முதலமைச்சரை செயல்படவிடாமல் துணைநிலை ஆளுநர் அரசியல் செய்வது மற்றும் மத்திய அரசு புதுச்சேரிக்கு போதிய நிதி ஒதுக்காதது உள்ளிட்டவைகளைக் கண்டித்தும், துணைநிலை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக.தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் உள்ளிட்டோர் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பின்னர் துணைநிலை ஆளுநர் உரையைக் கண்டித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Puducherry Cm should leave the BJP alliance and resign dmk mla

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, "முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, புதுச்சேரிக்கு போதிய நிதி பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலகக்கோரியும் வெளிநடப்பு செய்துள்ளோம். மேலும் கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வரும், பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன்று, கூட்டணியில் இருந்து வெளியேறி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும்" என வலியுறுத்தினார்.

Advertisment