ADVERTISEMENT

ஓரணியில் நிற்க அழைப்பு; ஆரம்பமே விரிசலா? - நிதிஷை நெருக்கடியில் தள்ளிய காங்கிரஸ்

11:12 AM Jun 06, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசி வருகின்றனர். இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தனர். இதற்கிடையில் பீகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பல்வேறு மாநில முதல்வர்களைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைப்பது குறித்துப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஓரணியாகச் செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 12 ஆம் தேதி பீகாரில் பிரமாண்டமாக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அழைப்புக்களும் முறைப்படி எதிர்க்கட்சிகளுக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், “ஜூன் 12 ஆம் தேதி தங்களுக்கு வசதியாக இல்லை என்று காங்கிரஸும் மற்ற கட்சிகளும் என்னிடம் தெரிவித்தனர். அதனால்தான் கூட்டத்தை தள்ளி வைக்க முடிவு செய்தேன். மற்ற கட்சிகளுடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். கூட்டத்தில் பங்கேற்க சம்மதித்துள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பிலும் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். கட்சி சார்பாக பிரதிநிதிகள் பங்கேற்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

இதனிடையே, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் சார்பில் ஒரு முதல்வரும், மூத்த தலைவரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறியிருந்தார். இந்த நிலையில் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்காமல் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ் குமார் கண்டிப்புடன் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT