ADVERTISEMENT

நாடு தழுவிய வேலை நிறுத்தம்: தொழிற்சங்கங்கள் அழைப்பு!

09:20 PM Mar 27, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாடு முழுவதும் நாளையும், நாளை மறுநாளும் நடக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமார் 25 கோடி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு அரசுத்துறைகளின் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

'மக்களை காப்போம்; நாட்டைக் காப்போம்' என்ற முழக்கத்துடன் நாளையும் (28/03/2022), நாளை மறுநாளும் (29/03/2022) நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறை நிறுவன தனியார் மயமாக்கல் கைவிட வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றன. காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி, நிலக்கரி, ஸ்டீல், எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரித்துறை உள்ளிட்ட ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 25 கோடி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்கின்றனர்.

ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அண்ணா தொழிற்சங்கம், மஸ்தூர் ஆகியவை அறிவித்துள்ளனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழக அரசு ஊழியர்கள் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும், இரண்டு நாட்களுக்கு வேலை வராத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் போக்குவரத்து, மின்துறைகள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிகிறது. எல்ஐசி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால் இரண்டு நாட்கள் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக, இரண்டு தினங்களுக்கு தங்களின் சேவைகள் ஓரளவுக்கு பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையில் சில சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், ரயில்வே பணிகளும் ஓரளவுக்கு பாதிக்கப்படும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT