புதுச்சேரி மாநிலம் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் 1,311 வவுச்சர் ஊழியர்கள் 30 நாட்கள் பணி வழங்க வேண்டும், மத்திய அரசின் சட்டக்கூலியான ரூ.648 வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 25- ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அதையடுத்து நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது முதலமைச்சர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்று வவுச்சர் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக விலக்கி கொண்டனர்.

Public Service Employees strike in puducherry

Advertisment

இந்நிலையில் வவுச்சர் ஊழியர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே உள்ள பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டத்திற்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது நேற்று (30.11.2019) மாலை வவுச்சர் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஏறினார்கள். அங்கு அவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரியும், அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர். அதிகாரிகள், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அல்வால், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கீழே இறங்கி வருமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு வவுச்சர் ஊழியர்கள் மறுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

Advertisment

அந்த சமயத்தில் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் செல்போன் வெளிச்சத்தில் தண்ணீர் தொட்டியில் இருந்தபடி போராட்டத்தை தொடர்ந்தனர். மாலை 04.00 மணிக்கு தொடங்கிய அந்த போராட்டம் இரவு 11.30 மணி வரை நீடித்தது. பின்னர் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், வையாபுரி, மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து அதிகாரிகளுடனும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சுமார் ஏழரை மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் காரைக்கால் திருநள்ளாறு பகுதியில் உள்ள நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று அங்கும் வவுச்சர் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.