ADVERTISEMENT

தித்திப்பாய் முடிந்த பங்குச்சந்தைகள்! முதலீட்டாளர்கள் உற்சாகம்!!

04:35 PM Jun 20, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான ஜூன் 19- ஆம் தேதி, இந்திய பங்குச்சந்தைகள் சென்செக்ஸ், நிப்டி ஆகியவை கிடுகிடுவென ஏற்றம் கண்டன. பெரும்பாலான பங்குகள் ஆதாயம் அளித்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

கடந்த வியாழனன்று (ஜூன் 18) 10,091.65 புள்ளிகளில் நிறைவடைந்த தேசிய பங்குச்சந்தையான நிப்டி, வெள்ளிக்கிழமை காலை 10,119 புள்ளிகளுடன் வர்த்தகத்தை தொடங்கியது. குறைந்தபட்சமாக 10,072 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக 10,272 புள்ளிகளுக்கும் சென்றது. வர்த்தக நேர முடிவில், 10,244 புள்ளிகளில் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இண்டெக்ஸைக் காட்டிலும் 152.75 புள்ளிகள் / 1.51% ஏற்றமாகும்.

நிப்டியில் பட்டியலிடப்பட்டுள்ள 50 முக்கிய பங்குகளில் 33 பங்குகளின் மதிப்பு பெரிய அளவில் ஏற்றம் கண்டிருந்தன. 16 பங்குகளின் மதிப்பு லேசாக சரிந்தன. ஒரு பங்கின் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

தேசிய பங்குச்சந்தையில் பஜாஜ் பின்சர்வ் (9.17%), பஜாஜ் பைனான்ஸ் (6.55%), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (6.4%), டாடா மோட்டார்ஸ் (5.76%), இன்பிராடெல் (4.99%) ஆகிய பங்குகள் அதிக ஆதாயம் அளித்தன. அதேநேரம், இண்டஸ் இந்த், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, வேதாந்தா, ஹெச்சிஎல், ஐடிசி ஆகிய நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. நிப்டியில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், ஆட்டோமொபைல், நிதி நிறுவனங்கள், ஊடகங்கள், பார்மா, ரியல் எஸ்டேட் துறைகள் மளமளவென ஏற்றம் கண்டன.

தேசிய பங்குச்சந்தையில், வெள்ளியன்று வர்த்தகத்தில் ஈடுபட்ட 1,912 பங்குகளில், 1,277 பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகம் ஆகின. 582 பங்குகள் லேசான சரிவைக் கண்டன. 53 பங்குகளில் மாற்றம் ஏதுமில்லை. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ், ஜூன் 19- ஆம் தேதியன்று 34,731.73 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது, முந்தைய நாள் இண்டெக்ஸை விட 523.68/ 1.53% புள்ளிகள் அதிகம். சென்செக்ஸ் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் வர்த்தகம் ஆனது. ஒரு கட்டத்தில் அதிகபட்சமாக 34,848.37 புள்ளிகள் வரை உயர்ந்தது. குறைந்தபட்சமாக 34,136 புள்ளிகளுக்கும் சென்றது.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்டு உள்ள பங்குகளில் 18 பங்குகள் விலை ஏற்றத்திலும், 12 பங்குகள் சற்று சரிந்தும் வர்த்தகம் ஆனது. கடந்த வாரத்தில் கடைசி இரண்டு நாள்களும் ஏறுமுகத்தில் சென்செக்ஸ், நிப்டி பங்குச்சந்தைகள் இருந்தது, முதலீட்டாளர்களிடம் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரத்திலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் காணும் என்கிறார்கள் சந்தை நிபுணர்கள். சில்லரை முதலீட்டாளர்களும் வரும் வாரத்தில் கணிசமான ஆதாயம் ஈட்ட முடியும் என்றும் சொல்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். குறிப்பாக, வரும் வாரத்தில் நிப்டி 10,333 முதல் 10,500 புள்ளிகள் வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT