ADVERTISEMENT

பரிந்துரை அறிக்கை மக்களவையில் இன்று தாக்கல்; பறிபோகுமா மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவி? 

08:10 AM Dec 08, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து அவர், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனி நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

ADVERTISEMENT

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனி நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நன்னடத்தை குழுவின் பரிந்துரை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT