Skip to main content

“மகாபாரத போரை பார்ப்பார்கள்” - மஹுவா மொய்த்ரா எம்.பி. 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
“They will see the Mahabharata war” - Mahua Moitra MP

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் நன்னடத்தை குழுவின் பரிந்துரை அறிக்கை இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தால் எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “துர்கை வந்துவிட்டார்; பொறுத்திருந்து பார்ப்போம். துணிகளை உருவ துவங்கிய இவர்கள், தற்போது மகாபாரத போரை பார்ப்பார்கள்” என்று தெரிவித்தார். மேலும், தொடர்ந்து பேசிய அவர் புகழ்மிக்க கவிஞரும், முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினருமான ராம்தாரி சிங் தினகரின் வரியை மேற்கொள் காட்டி, “ஒரு மனிதன் அழியும் போது முதலில் மனசாட்சி மரணிக்கிறது” என்று தெரிவித்துவிட்டு நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு உயரும்'- ஜி.கே.வாசன் பேட்டி

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
 'If BJP comes back to power, the country will rise' - GK Vasan interview

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இணைவதாக கட்சியின் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கான காரணம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''நேற்று மாலை பாஜகவினுடைய தமிழக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 30 நிமிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் பேசினோம். மேலும் நாளைய தினம் வருகின்ற 27 ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர், என்னை கலந்துகொள்ள வேண்டும் என என்னிடம் நேரில் அழைப்பு விடுத்தார்.

பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து ஆரம்பத்தில் இருந்து இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் தமாகாவினுடைய கருத்துகளை முறையாக கேட்டு ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம் வலிமையான பாரதம் இதன் மீதும், தமிழக மக்கள் மீதும், உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள கட்சி என இந்த முடிவை நாங்கள் எடுத்திருக்கிறோம். சாதாரண மக்களின் எண்ணங்களையும் திமுக அரசு பிரதிபலிக்க தவறிவிட்டது. அதிமுக முடிவில் தலையிட விரும்பவில்லை. அவரவர் முடிவு, அவரவர் கொள்கை அடிப்படையில் அமைந்தது. ஒரே கருத்துள்ள கட்சிகள் மீண்டும் இணைந்தால் மக்கள் ஒன்றும் எதிர்க்க மாட்டார்கள். பல்வேறு மாநிலங்களுடைய ஆதரவைப் பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் நகரம் முதல் கிராமம் வரை மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டிருக்கிறது'' என்றார். 

Next Story

புதிய குற்றவியல் சட்டங்கள் எப்போது அமல்? - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Notification issued by Central Govt for When will the new criminal laws come into force?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டங்கள்தான் இப்போது வரை அமலில் இருந்தன. இதற்கிடையே, இவற்றுக்கு மாற்றாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. அதன்படி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 3 குற்றவியல் மசோதாக்கள் இந்தியில் மாற்றப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன.

அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் என்பதை பாரதிய நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா எனவும், இந்திய சாட்சியங்கள் சட்டம் என்பதை பாரதிய சாக்சியா எனவும் பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் 3 மசோதாக்களையும் தாக்கல் செய்தார். அதன் பின்னர், அவை நாடாளுமன்ற ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நாடாளுமன்ற நிலைக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக சமர்ப்பித்தது. அந்த பரிந்துரைகள் சேர்க்கப்பட்டு புதிய குற்றவியல் மசோதாக்கள் உருவாக்கப்பட்டன. 

இதையடுத்து, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளுடன் கூடிய புதிய குற்றவியல் மசோதாக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி மத்திய உள்துறை அமித்ஷா தாக்கல் செய்தார். மக்களவையில் 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்த 3 குற்றவியல் மசோதாக்களும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த 3 புதிய குற்றவியல் மசோதாக்களும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.