ADVERTISEMENT

தடை உத்தரவை மீறி அமைச்சக ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் போராட்டம்

07:58 PM Nov 23, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள மேல்நிலை எழுத்தர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்புகளை வெளியிட்டு அதன்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேல்நிலை எழுத்தர் பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் பணிபுரியும் அமைச்சக ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளநிலை எழுத்தாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி மேல்நிலை எழுத்தர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் அரசு இதனைக் கண்டு கொள்ளாமல் நேரடியாக காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சக ஊழியர்களின் போராட்டத்தால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அந்த அறிவிப்பில், 'அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தக்கூடாது என்றும், அப்படி மீறி போராட்டம் நடத்தினால் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அமைச்சக ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து புதுச்சேரி சட்டமன்றம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் சேஷாச்சலம் கூறுகையில், "அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்களை மிரட்டும் தொனியை அதிகாரிகள் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும். முதலமைச்சர் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும்" என எச்சரித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT