Skip to main content

என்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம்..! - நாராயணசாமி ஆவேசம்! 

 

Struggle

 

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்பப் பெறக்கோரியும் புதுச்சேரியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன், காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ்,  தி.மு.க (வடக்கு) மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், விடுதலைச் சிறுத்தைகள் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கி முதல்வர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். 

 

அவர் பேசும்போது:- "விவசாயத்தை வர்த்தகம் ஆக்குவது, உரிய விலை கொடுப்பது, அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு திருத்தியிருக்கிறது. பா.ஜ.க அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் இல்லை. அங்கு இந்தச் சட்டங்களைக் கொண்டு வந்தபோது பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். 

 

அதனைப் பொருட்படுத்தாமல் துணை சபாநாயகர் சட்டத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என மனு அளித்தனர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள். அதையும் மீறி அவசர அவசரமாகக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஜனநாயகப் படுகொலை செய்து மசோதாவை நிறைவேற்றி உள்ளனர். விவசாயிகளின் விரோத மசோதாவைக் கண்டித்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 

 

சிறு விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொள்வதுடன் விவசாயிகளை அடிமையாக்கி, கூலிகளாக்கிவிடுவார்கள். விளைபொருட்களை எந்த மாநிலத்துக்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 

 

நாட்டை கார்ப்பரேட்டுகளிடம் அடகு வைக்கும் வகையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி விட்டனர். தொழிலாளர் சட்டங்களில் கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என கவர்னர் எனக்குக் கடிதம் எழுதினார். முதலில் நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டர். அதன் பிறகுதான் முதலமைச்சர். என்னிடம் இந்த பூச்சாண்டி எல்லாம் காட்டவேண்டாம். 

 

பஞ்சாப் முதல்வர் இந்த மத்திய அரசின் மசோதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராடி இருக்கிறார். இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்பட மாட்டோம். எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கின்றோம். இது ஆரம்பம்தான். கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் சக்தியைத் திரட்டுவோம். விவசாயிகளுக்காக ஆட்சி இழந்தாலும் பரவாயில்லை. எனவே விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்ட மசோதாக்களையும் மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்" என்றார்.  

 

Ad

 

புதுச்சேரியில் 7 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

 

இந்த ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ், தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க, புதிய நீதிக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், படைப்பாளி மக்கள் கட்சி, தேசிய வாத காங்கிரஸ், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்