ADVERTISEMENT

சீனப் பொருட்களின் சந்தையாக இந்தியாவை மாற்ற மோடி திட்டமா?

09:51 PM Oct 10, 2019 | kalaimohan

ஒரு நாட்டின் ஜனாதிபதியை இன்னொரு நாட்டின் புராதன இடத்துக்கு அழைத்து வருவது மிகப்பெரிய சாதனை எதுவும் இல்லை. இந்திய பிரதமர் சீனாவில் முக்கியமான இடத்தை பார்க்க விரும்பினால், எந்த ஆடம்பரமும் பந்தாவும் இல்லாமல் சில அதிகாரிகளே அவரை அழைத்துப் போய் காட்டிவிடுவார்கள்.

ஆனால், இந்திய பிரதமர் மோடியின் விளம்பர ஆசை, போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆசை ஒரு சின்ன சந்திப்பு நிகழ்ச்சியை பூதாகரமாக்கி மகிழச் செய்திருக்கிறது. அவருக்குத் தோதாக தமிழக அரசும் ஆட்டம் போடுகிறது.

இதற்கு முன் 1956ல் அதாவது 63 ஆண்டுகளுக்கு முன்னரே, மாமல்லபுரத்திற்கு சீன பிரதமர் சூ என் லாய் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வந்து போயிருக்கிறார். சீன தலைவர் மாவோவின் தோழரான அவரையே அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்தான் வரவேற்று மாமல்லபுரத்தை சுற்றிக்காட்டியிருக்கிறார். செங்கல்பட்டு என்றால் காஞ்சிபுரம், திருவள்ளூர் எல்லாம் சேர்ந்த மாவட்டம் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிறகு சென்னை நகராட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வரவேற்பில் காங்கிரஸாரும், பள்ளிக்குழந்தைகளும் சாலையின் இருபக்கமும் நின்று மலர்தூவி வரவேற்றிருக்கிறார்கள். இத்தகைய ஒரு வரவேற்பில் இந்திய பிரதமர் நேரு கலந்துகொண்டு பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை.

சூ என் லாய் இந்தியா வந்ததை இரு நாட்டு நல்லுறவின் அடையாளமாக நேரு கருதினார். இந்திய அரசு சார்பில் இந்தோ சீனா பை பை என்ற கோஷம் உருவாக்கப்பட்டு அதை பள்ளிக்குழந்தைகளும் முழங்கின. ஆனால், 1962ல் இந்திய சீன யுத்தத்தில் இந்தியா வெற்றிகரமாக பின்வாங்கிய நிகழ்வும் தொடர்ந்ததை மறந்துவிடக்கூடாது.

சீனாவுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது நல்லதுதான். ஆனால், சீனாவுக்கு போட்டியாக மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துக் கொண்டிருந்த இந்தியா இப்போது 7 ஆவது 8 ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேக் இன் இந்தியா என்று முழக்கமிட்ட மோடி, சீன அதிபரை இந்தியாவுக்கு கொண்டுவந்து எதைச் சாதிக்கப்போகிறார் என்பது புரியவில்லை. இரு தலைவர்களுக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்து ஆகாது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படியானால், மாமல்லபுரத்துக்கு சீன அதிபருடன் பிரதமர் மோடி வர வேண்டிய அவசியம் என்ன? கடற்கரை கோவில் முன்பாக விருந்து கொடுப்பதற்காக பிரதமரே வரவேண்டுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

சீனாவின் 20க்கு மேற்பட்ட நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த உலகம் முழுவதும் வாய்ப்புகளை கேட்டு வருகிறது சீனா. மிகக்குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் சீனப் பொருட்கள் பல நாடுகளின் உற்பத்தியை நாசம் செய்வதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கெனவே தொழில்கள் நசிந்து வருகின்றன. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அறிமுகம் என்ற பல காரணங்களால் ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி மோடியின் ஆலோசனையின் பேரில் பக்கோடா விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் வளர்முக நாடான இந்தியாவின் பிரதமர் மோடி, இன்னொரு வளர்முக நாடான சீனாவிடம் எத்தகைய உதவியை பெற்றுத்தர போகிறார்?

சீனா பட்டாசுகளைப் புறக்கணிப்போம் என்று முழங்கிய பாஜகவினர் இப்போது சீன அதிபரை வரவேற்று கொடி பிடிக்கிறார்கள். சீனாவின் மலிவுவிலைப் பொருட்கள் இந்திய சந்தையில் வந்து குவிந்தால், இந்தியாவின் சிறு தொழில்கள் மேலும் நாசமடையும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஆனால், இந்திய பொருளாதாரம் குறித்து மோடி அரசுக்குத்தான் கவலையே இல்லையே. அந்த சீரழிவை விவாதிப்பதே தவறு என்று ஆர்எஸ்எஸ் தலைவரே சொல்லிவிட்டபோது, அரசு எப்படி விவாதித்து தீர்வு காணப்போகிறது?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT