ADVERTISEMENT

எம்.எல்.ஏவை சுட்டுக்கொன்ற மாவோயிஸ்ட்கள். – பின்னணி என்ன ?.

06:04 PM Sep 23, 2018 | raja@nakkheeran.in

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது அரகுவேலி என்கிற பழங்குடியினருக்கான தனி தொகுதி. ஓடிஷா மாநிலத்தின் எல்லையோரம் உள்ள தொகுதி. இந்த தொகுதியில் 2014ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நின்றவர் பொடபயலு மண்டலத்தில் உள்ள நதிமிவாடா கிராமத்தை சேர்ந்த பழங்குடியான பாலண்ணாவின் மகன் கிடாரி சர்வேஸ்வர ராவ், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் இதே தொகுதியில் நின்றவர் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா. இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிடாரி தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவேரிசோமாவை விட 29 ஆயிரம் வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2016 ஏப்ரல் மாதம் எம்.எல்.ஏ கிடாரி தெலுங்கு தேசம் கட்சியில் போய் சேர்ந்தார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருவதால், ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் தனது தொகுதியில் கிராமத்தை பார்வையிடுதல் ( வில்லேஜ் விசிட் ) நடத்துகிறார் கிடாரி. அந்த நிகழ்ச்சிக்கு செப்டம்பர் 23ந்தேதி வில்லேஜ் விசிட்க்கு போய்விட்டு தனது ஊருக்கு காரில் திரும்பிவந்துள்ளார். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா, தெலுங்கு தேசம் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் காரில் இருந்துள்ளனர். இவர்களின் கார் மதியம் 2 மணியளவில் தும்பிரிகுடா வட்டத்தில் உள்ள லிப்பிடிபுட்டா என்கிற கிராமத்தின் வழியாக சென்றுக்கொண்டு இருந்தபோது, சாலையின் குறுக்கே நின்று எம்.எல்.ஏவின் காரை ஒருபெண் தலைமையில் வந்த மாவேயிஸ்ட்கள் படையினர் மடக்கி நிறுத்தியுள்ளனர்.

அதன்பின் நடந்தவற்றை எம்.எல்.ஏவின் பாதுகாவலர் சுவாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, கார் நின்றது, அப்போது அவர்கள் கையில் ஏ.கே47 துப்பாக்கிகள் இருந்தன. நான் உடனே சுதகரித்துக்கொண்டு படுத்துக்கொள்ளச்சொன்னேன். அவர்கள் காரை நோக்கி துப்பாக்கி சுட்டார்கள். 15 நிமிடத்துக்கு பின், மாவேயிஸ்ட் படை அங்கிருந்து தப்பி காட்டுக்குள் சென்று மறைந்தது. நாங்கள் பார்த்தபோது, எம்.எல்.ஏ (கிடாரி சர்வேஸ்வரராவ்) சம்பவயிடத்திலேயே இறந்துயிருந்தார். முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் சிலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை மருத்துவமனைக்கு வழியில் வந்த வாகனங்களை மடக்கி அனுப்பிவைத்தேன் என்றார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே முன்னாள் எம்.எல்.ஏ சிவேரிசோமா வும் இறந்துள்ளார். சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

எம்.எல்.ஏவை குறிவைத்தது ஏன் ?.

ஆந்திரா மாநிலத்தின் அரகுவேலி தொகுதி மலைப்பகுதி. சுற்றுலாப்பகுதியாகவும் உள்ளது. ஆந்திரா – ஓரிசா மாநில எல்லையில் இந்த தொகுதிக்குள் வரும் அனந்தகிரி, சன்கரிமிட்ட வனப்பகுதிகள் உள்ளன. இந்த தொகுதியில் அதிகளவில் கற்குவாரிகள் உள்ளன. இந்த இந்த மலைகளை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் வளைத்துப்போட்டு பாக்ஸைட் என்கிற கனிமப்பொருளை வெட்டியெடுத்து வருகின்றன.

மாநிலத்தில் இந்த பகுதியில் அதிகளவில் பாக்ஸைட் என்கிற கனிம தாதுவை வெட்டியெடுப்பதால் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அதனை எதிர்த்தார். அதனாலயே 2014ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிடாரி வெற்றி பெற்றார்.

கிடாரி பதவிக்கு வந்தபின், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னால் எம்.எல்.ஏவான சிவேரிசோமா வுடன் மறைமுகமாக கைகோர்த்தார். அவர் ஏற்கனவே சட்டவிரோதமாக கனிமவளங்களை வெட்டியெடுக்கும் தொழிலில் இருந்தார். இதனாலயே மக்கள் அவரை தோற்கடித்தனர். அவர் ஆதரவுடன் கார்ப்பரேட் கம்பெனிகளோடு கைகோர்த்துக்கொண்டார் கிடாரி. அதோடு, சட்டவிரோதமாக அவரும் தனது மகன்கள் சந்தீப், சர்வன்குமார் பெயரில் கம்பெனி தொடங்கி மலைகளை வளைத்துப்போட்டு அங்கு பாக்ஸைட் வெட்டியெடுக்க தொடங்கினார். ஆளும் தெலுங்குதேசம் கட்சி கிடாரி மீது வழக்குள் பதிவுசெய்தது.

2015ல் இந்த பகுதியில் 1200 ஹெக்டர் வனத்துறை பகுதி ஆந்திரா மினரல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷனுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த நிறுவனத்தோடு சேர்ந்து சட்டப்படியும் கனிமங்களை வெட்டியெடுக்கலாம் என முடிவு செய்தார். அதோடு, தன் மீதுள்ள வழக்குகளையும் கைவிட வைக்க முடியும் என முடிவு செய்து சிவோரிசோமா மூலமாக தெலுங்கு தேசம் கட்சிக்கு மாறினார் கிடாரி.

மலைவாழ் மக்களின் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டதோடு, அந்த மலையை கார்ப்பரேட் கம்பெனிகள் கனிமங்கள் வெட்டியெடுக்க அரசு விடும் ஒப்பந்தங்களுக்கு சாதகமாக இருந்ததோடு பழங்குடியின மக்களை மலையை விட்டு துரத்துவது, எதிர்ப்பவர்களை கொன்றுவந்தனர். இதனால் பழங்குடியின மக்களிடம் செல்வாக்குப்பெற்ற மாவோயிஸ்ட்களின் கோபத்துக்கு ஆளாகினார் எம்.எல்.ஏவான கிடாரி. இதுப்பற்றி அவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் மாவோயிஸ்ட்கள்.

உளவுத்துறை எச்சரிக்கை…….

விசாகப்பட்டினத்தின் புற மாவட்டங்களில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்கள் கிராமப்புறங்களுக்கு செல்வதாக இருந்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் விடப்பட்டுயிருந்தது. அதேபோல் மாவோயிஸ்ட்களின் பட்டியலில் முதல் இடத்தில் உங்கள் பெயர் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை நோட்ஸ் அனுப்பியுள்ளது என்று கிடாரிக்கு போலிஸ் தகவல் கூறியுள்ளது. அப்படியிருந்தும் அவர் போலிஸ்க்கு தகவல் சொல்லாமல் சென்றுள்ளார். இதனை விசாகப்பட்டினத்தின் புறநகர் எஸ்.பி ராகுல்தேவ்சர்மாவும் உறுதி செய்கிறார்.

கடந்த சில மாதங்களாக மாவோயிஸ்ட் தலைவர்களில் முக்கியமானவரான அக்கிராஜீ நடமாட்டம் ஆந்திரா – ஒடிசா எல்லையில் உள்ள அரகுவேலி பகுதியில் காணப்படுகின்றன என அரசை அலார்ட் செய்துள்ளது உளவுத்துறை.

வேட்டையாடிய 50 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு.

எம்.எல்.ஏ கிடாரியை கடந்த சில வாரங்களாக நன்றாக பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை கண்காணித்தபின்பே இந்த ஆப்ரேஷனில் மாவோயிஸ்ட்கள் ஈடுப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஆர்.கே என்கிற ராமகிருஷ்ணா தான் இந்த ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கியதாக கூறப்படுகிறது. 50 மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலில் ஈடுப்பட்டனர் என்கின்றது முதல்கட்ட தகவல். அதில் பெண்களும் இருந்தனர் என்கின்றனர்.

​இது மனிததன்மையற்ற செயல் எனவும், பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தவர் மறைந்த எம்.எல்.ஏவும், முன்னாள் எம்.எல்.ஏவும் என இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார் முதல்வர் சந்திரபாபுநாயுடு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT