ADVERTISEMENT

மணிப்பூர் விவகாரம்; மூன்றாவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

11:42 AM Jul 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் இரு பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இரு அவைகளிலும் உடனடியாக இதுகுறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மதியம் இரு அவைகளும் கூடிய நிலையில், மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த சம்பவம் குறித்து உடனே இரு அவைகளிலும் விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் மீண்டும் தொடர்ந்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் காலை இரு அவைகளும் கூடியது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மக்களவை 12 மணிக்குக் கூடியது. அப்போதும் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைமை மாநிலங்களவையிலும் நீடித்ததால் நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, மூன்றாவது நாளாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூரில் நிகழ்ந்த கொடூரச் சம்பவம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும், இந்தச் சம்பவம் குறித்துப் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தச் சம்பவம் குறித்து அவையில் உடனடியாக விவாதிக்கக் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT