Monsoon Conference Both Houses adjourned

இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 15 அமர்வுகள் நடைபெற உள்ளன. மழைக்காலக் கூட்டத்தொடரில் மணிப்பூரில் வன்முறை, பொது சிவில் சட்டம், ஆளுநர்கள் செயல்பாடுகள், அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வு, டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி உள்ளன. எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

அதே சமயம் மழைக்காலக் கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் தொடர்பான அவசரச் சட்டம், டிஜிட்டல் தனிநபர் தகவல் மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா உள்ளிட்ட 31 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 7 மசோதாக்கள் விவாதத்திற்கு கொண்டு வர உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் இரு அவைகள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சிகள் சார்பில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இருஅவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவியது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் மறைந்த மக்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று கடந்த ஜூன் மாதம் மறைந்த ஹர்த்வார் துபேக்கு மரியாதை செலுத்தும் வகையில் மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.முன்னதாகமணிப்பூரில் இரு பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை எற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.