ADVERTISEMENT

கோலிவுட் vs மோலிவுட்; எழுத்தாளர் ஜெயமோகனுக்கு சரமாரி கேள்வி!

12:16 PM Mar 14, 2024 | ArunPrakash

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ளது குணா குகை. இந்தக் குகையைக் கண்டறிந்த ஆங்கிலேயேர்கள் இதற்கு டெவில் கிச்சன் என பெயர் சூட்டினர். மிகவும் ஆபத்தான இந்தக் குகையில், கடந்த 33 வருடங்களுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்த குணா என்ற திரைப்படம் உருவானது. அதன் பிறகே, டெவில் கிச்சனாக இருந்த இந்தக் குகை, குணா குகை எனப் பெயர் பெற்றது.

ADVERTISEMENT

இந்தக் குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் `மஞ்சும்மல் பாய்ஸ்'. இந்தத் திரைப்படம் கேரளா மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன், தனுஷ், விக்ரம் எனப் பலரும் பாராட்டியிருந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், இப்படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தத் திரைப்படத்தைப் பார்த்த அவர், அதனை விமர்சிக்கும் விதமாக ஒரு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி. ஆனால் 'யானை டாக்டர்' எழுதியவன் என்கின்ற முறையில் இதை எழுத வேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துகள் வழியாக நேற்று 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என அந்தக் கட்டுரையை ஆரம்பித்த எழுத்தாளர் ஜெயமோகன், மஞ்சும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் இந்தப் பழக்கம் உள்ளது. இவர்கள் சுற்றுலா மையங்களுக்கு மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடி..குடி..குடி.. அவ்வளவுதான். எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும். இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். என அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு கேரளா மட்டுமல்லாது தமிழ் சினிமா துறையில் இருந்தும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் பலர் சமூக வலைத்தளங்களிலும் எழுத்தாளர் ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், கேரளாவின் பிரபல எழுத்தாளரான உண்ணி, ஜெயமோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மலையாள மனோரமாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயமோகன் எழுதிய கட்டுரையைப் படித்தேன். அதில் அவ்வளவு விஷமத்தனம் உள்ளது. குடிப்பவர்கள் எல்லாரும் அயோக்கியர்கள் என்ற வாதம் மேட்டுமைத்தனத்தின் வாதமே. மலையாளிகளில் கள்ளிறக்கும் தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆண் பெண் பேதமின்றி, மது அருந்துபவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்க, இதனை ஒதுக்கப்பட்டவர்களின் நாகரிகமில்லாத களியாட்டமாகவே சிலர் பார்க்கிறார்கள். இந்த ஆதிக்க உணர்வுதான் ஜெயமோகன் வாதத்தின் பின் இருக்கும் உண்மை.

மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், அடித்தட்டு வாழ்க்கை வாழும் நண்பர்களின் கதை. படத்தில் அவர்கள் குடிகாரர்கள் என்றும் பொறுக்கிகள் என்றும் காட்டினாலும், ஆபத்தான கட்டத்தில் தனது நண்பனைக் காப்பாற்றிய மனிதாபிமானம் இந்த ஆசாமி கண்ணில் ஏன் படவில்லை. இயற்கையின் சீற்றத்தால், பிரச்சனை ஏற்பட்ட போது, மலையாளிகளும், தமிழரும் பரஸ்பரம் கைநீட்டித் தொட்டுக் கொண்டார்கள். அவர்களில் குடிகாரர்களும் இருந்தார்கள் எனவும் சாடியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், அந்தக் கட்டுரையின் இறுதியில் சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். அதில், கேரளக் கடற்கரைகளில் மாலை நேரங்களில் செல்லப் பயமாக இருக்கிறதா?... உங்களுக்குள் இருக்கும் கிழவனுக்கு இளைஞர்கள் மேல் ஏன் இத்தனை வெறுப்பு?... உங்களைப் போல கீழ்மைக்கு அடிமையாகாமல் மலையாளி இளைஞர்கள் தங்களை நிரந்தரமாக நவீனப்படுத்திக் கொள்வதாலா?... கேரளத்துக்கு கதை எழுத வந்த உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு தவிர்த்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்குதலா இந்த வசை மாரி?... உள்ளிட்ட காட்டமான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். தமிழகம் மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் இப்படி விமர்சனம் செய்துகொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT