daughter-in-law beating mother-in-law; A shocking scene

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமஸ். இவருடைய மனைவி மஞ்சுமோள் (42). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தாமஸ் தனது 80 வயதான தாயார் எலியம்மா வர்கீஸை தன் வீட்டில் வைத்து கவனித்துவருகிறார். இதனிடையே, எலியம்மா வர்கீஸை அவரது மருமகள் மஞ்சுமோள் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் (13-12-23) மஞ்சுமோள் தனது மாமியார் எலியம்மா வர்கீஸை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், எலியம்மா வர்கீஸ் வீட்டு ஹாலில் உள்ள கட்டிலில் அமர்ந்திருக்கிறார். அப்போது, அவரது மருமகள் மஞ்சுமோள் அவரை உள்ளே உள்ள ஒரு அறைக்கு செல்லுமாறு சத்தம் போட்டு கூறி எலியம்மாவை மிகவும் கொடூரமாக கீழே தள்ளிவிடுகிறார். அதில் கீழே விழுந்த எலியம்மா எழுந்து தன்னை சரிசெய்து கொள்ள முயற்சி செய்து வேதனையோடு அங்கிருந்து நகர்ந்து செல்வது போல் வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

இந்த காட்சியை தாமஸின் உறவினர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வைரலான நிலையில், போலீசார் மஞ்சுமோள் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.அதில், மஞ்சுமோள் எலியம்மாவை பின்னால் இருந்து தள்ளிவிட்டு தாக்கியது உறுதிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாமியாரை கொடூரமாகத் தாக்கிய குற்றத்திற்காக மஞ்சுமோள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.