ADVERTISEMENT

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

04:41 PM Feb 06, 2024 | mathi23

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியின் போது, சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்தக்காரர் உடுப்பி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும், அந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பாவை கைது செய்யவும், பதவி விலகக் கோரியும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீஷித் அமர்வு முன் வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து, அவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6 ஆம் தேதியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா 11 ஆம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மார்ச் 15 ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT