Skip to main content

காவிரி அரசியல்; ஆளும் கட்சிகளின் சவால்! 

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

Cauvery issue that challenges the ruling parties

 

இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் நதிநீர் பிரச்சனை கூட இங்கு தீர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவிரி நதிநீர் பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. பல வருடங்களாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சனையில் இரு மாநிலங்களிலும் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. எல்லாரும் இந்தியர்கள் தான் என்று வெளியில் நாம் சொல்லிக்கொள்கிறோம் ஆனால் எதார்த்தம் வேறாக இருக்கிறது. காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதையும், தமிழகத்தில் கர்நாடகாவினர் தாக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா. 

 

தமிழகம், கர்நாடகா இடையே இருக்கும் காவிரி பிரச்சனையை பேசி தீர்க்க முடியாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது, அதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி கடந்த 1990 ஆம் ஆண்டு மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. பல்வேறு விவாதங்களுக்கு பிறகு நடுவர் மன்றம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 205 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நடுவர் மன்றம் தீர்ப்பளித்தாலும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தது. இதையடுத்து கிட்டத்தட்ட 16 ஆண்டுகால விசாரணைக்கு பிறகு கடந்த 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில், தமிழகத்துக்கு 192 டிஎம்சி தண்ணீரை மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டும்; மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைக்க வேண்டும் எனத் உத்தரவிட்டிருந்தது. 

 

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் வழங்கிய 192 டிஎம்சி தண்ணீர் அளவிலும் 14.75 டிஎம்சி யை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேலாண்மை ஆணையத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு நீதிமன்ற உத்தரவுப்படியோ, நடுவர் மன்றத்தின் உத்தரவுப்படியோ தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட்டதில்லை. இதற்காக பல போராட்டங்கள் பேச்சுவார்த்தைகள், அழுத்தங்கள் என என்ன நடந்தாலும் கர்நாடக அரசு மறுப்பு நிலையிலேயே உள்ளது.

 

Cauvery issue that challenges the ruling parties

 

6 வாரத்திற்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம், 2018 ஆம் அண்டு அமைக்கப்பட்டது. அதன்பிறகு காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை வரும்போது தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை நாடுவதும், அவர்கள் நமக்கு குறிப்பிட்ட தண்ணீரை தர உத்தரவிடுவதும், அதனை கர்நாடகா மதிக்காமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. 

 

இப்படியான சூழ்நிலையில்தான் கர்நாடக அரசு ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறக்க உத்தரவிட வேண்டியும், செப்டம்பர் மாதம்  திறந்துவிட வேண்டிய 37.76 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் மனுதாக்கல் செய்தது. இருமாநில அரசுகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்துவிட வேண்டும் என செப்டம்பர் 18 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், பருவ மழை பொய்த்து போனதால் கர்நாடக மாநிலத்தில் வறட்சி பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கரநாடக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்; தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி கடந்த 23 ஆம் தேதியிலிருந்து தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. 

 

தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்ட 23 ஆம் தேதியில் இருந்து கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் தற்போது திறக்கும் தண்ணீரே பற்றாக்குறை தான் என்று தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக திமுகவினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்படி இருக்கையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைமையிடம் பேசி கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்துவிட முயற்சி செய்யலாமே என்றும் சிலர் பேசுகின்றனர்.

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், கர்நாடகாவில் தண்ணீர் திறக்க கூடாது என்று உறுதியாக காங்கிரஸ், பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தி தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தண்ணீர் பிரச்சனையில் அரசியலாளர்களுடன், கர்நாடகா சினிமா துறையும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் போக கூடாது என்று குரல் கொடுத்து வருகிறது. நேற்று கர்நாடக மாநிலம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு முழு பந்த் நடைபெற்றது. அதில் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திதி கொடுத்து போராட்டம் செய்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படி அவமதிக்கலாமா என்று சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். அதேசமயத்தில், திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி திதி கொடுத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளனர். 

 

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரி பிரச்சனையை வெறும் அரசியலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தவில்லை; சினிமாவிலும் அதன் பிடி நீண்டிருக்கிறது. காவிரி பிரச்சனைக்கு எப்படி கர்நாடக திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்திருக்கிறார்களோ, அதேபோல தமிழக திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்திருக்கிறார்கள். அதன் விளைவாக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகளுடன் தமிழ் திரைப்பிரலங்களின் உருவ பொம்மைகளும் எரிக்கப்பட்டு அவர்கள் நடிக்கும் படங்களை திரையிடக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து கர்நாடக அரசியல் கட்சி தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, எந்த கர்நாடக திரை பிரபலங்களின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டு அவர்களின் படங்கள் திரையிடக் கூடாது என்று தமிழகத்தில் இதுவரை எந்த குரலும் எழவில்லை என்று சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

 

Cauvery issue that challenges the ruling parties

 

காவிரியில் தண்ணீரை திறந்தால் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என்றும், அதே சமயம் காவிரியில் தண்ணீர் வாங்கி தரவில்லை என்றால் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும் என தொடர்ந்து அரசியல் செய்யப்பட்டு வருகிறது.

 

 

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.