ADVERTISEMENT

‘எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்’ - மருத்துவ மாணவியின் தற்கொலை கடிதம்

03:13 PM Nov 14, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரக்ருதி ஷெட்டி (20). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். மேலும், இவர் அந்தக் கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று (13-11-23) அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி தங்கும் விடுதியின் 6வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்த சக மாணவிகள் இந்த சம்பவம் குறித்து விடுதி வார்டனிடம் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மருத்துவ மாணவி பிரக்ருதி ஷெட்டி நேற்று அதிகாலை 3 மணி அளவில் தான் தங்கியிருந்த முதல் தளத்தின் அறையிலிருந்து தங்கும் விடுதியின் 6வது மாடிக்குச் சென்றுள்ளார். மேலும், அங்குள்ள தனது தோழியின் அறை முன்பு செல்போன், காலணியை கழற்றி விட்டுவிட்டு அங்கிருந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சோதனையில், பிரக்ருதி ஷெட்டி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்ததாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தை மீட்ட காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை தெரிந்துகொண்டனர்.

பிரக்ருதி ஷெட்டி எழுதியிருந்த கடிதத்தில், ‘எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. நான் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பினேன். ஆனால், எனது உடல் பருமனாக இருந்ததால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டேன். உடல் பருமனான காரணத்தால் நான் அழகாக இல்லை. உடல் எடையை குறைக்க பயிற்சி மேற்கொண்ட போதும் அதுவும் பலனளிக்கவில்லை. மேலும், அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT