ADVERTISEMENT

இன்று வெற்றி பேரணி நடத்தும் விவசாயிகள் - வீடு திரும்புவர்களை வரவேற்க ஏற்பாடு!

10:05 AM Dec 11, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 15 மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதில் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு ஒரு வருடமாக விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இருப்பினும், குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவந்தனர். இந்தநிலையில், கடந்த ஒன்பதாம் தேதி மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அந்த குழுவில் விவசாயிகளும் இடம்பெறுவார்கள் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

விவசாயிகள் மீதான வழக்குகள் உடனடியாக திரும்பப் பெறப்படும் எனவும், பயிர் கழிவுகளை எரித்ததற்கான வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்த மத்திய அரசு, மேலும் மின்சார மசோதா, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சாவுடனான ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும், உத்தரப்பிரதேச, ஹரியானா அரசுகள் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்தக் கடிதத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், போராட்டத்தைக் கைவிடுவதாகவும், இன்றைய தினம் (11.12.21) போராட்ட களத்திலிருந்து விவசாயிகள் வெளியேறுவார்கள் எனவும் கடந்த 9ஆம் தேதி அறிவித்தனர். இந்தநிலையில் தற்போது விவசாயிகள், டெல்லியை எல்லையை விட்டு வெளியேற தயாராகிவருகின்றனர்.

வீடு திரும்பும் விவசாயிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, வழியெங்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விவசாயிகள் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து இன்று வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். நேற்று நடைபெற இருந்த இந்தப் பேரணி, முப்படைத்தளபதி பிபின் ராவத்தின் மறைவு காரணமாக இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT