ADVERTISEMENT

குடிசைவாழ் மக்கள் உடனடியாக வெளியேற நோட்டீஸ் அனுப்பிய அகமதாபாத் மாநகராட்சி!

10:04 AM Feb 19, 2020 | santhoshkumar

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ள நிலையில் குஜராத்தின் குடிசை பகுதிகள் சுவர் எழுப்பி மறைக்கப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்த சூழலில், இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் விதமாக ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை தரப்பில் அறிவிப்பு வெளியானது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு ட்ரம்ப் செல்கிறார்.

அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா கிரிக்கெட் அரங்கை அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும் திறந்து வைக்கின்றனர். அதன்பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் ட்ரம்ப் பங்கேற்கிறார்.

இந்நிலையில், அகமதாபாத்தின் இந்திரா பாலத்தில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையுடன் சேர்த்து தடுப்புச் சுவர் கட்டும் பணியில் அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஈடுபட்டுள்ளது. 6 முதல் 8 ஆதி உயரத்தில் எழுப்பப்படும் இந்த சுவர்கள் சாலையில் இருந்து குடிசை பகுதிகள் தெரியாத வண்ணம் கட்டப்படுகின்றன. சுமார் அரை கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த சுவர் அமையும் பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

மேலும் ட்ரம்ப் திறந்து வைக்கவுள்ள மோதிரா கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே வாழும் குடிசை வாழ் மக்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அகமதாபாத் மாநகராட்சி. அமெரிக்க அதிபர் வருகைக்கும், குடிசைவாழ் மக்களுக்கும் வழங்கப்பட்ட நோட்டீஸுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT