ADVERTISEMENT

எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம்; வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட முதல்வர்

10:49 AM Nov 04, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்க பேரம் பேச முயன்றதாகக் கூறி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ் (தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களை இடைத்தரகர்கள் மூலம் விலைக்கு வாங்க பாஜக முயன்றதாகக் கூறப்பட்டது.

அதன்படி, டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோகித் ரெட்டி ஆகிய நான்கு பேரிடம் இடைத்தரகர்கள் மூலம் பாஜக சார்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், அந்த நான்கு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் தெலங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் ஆட்சியைக் கலைக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் சந்திரசேகர் ராவ் கூறியிருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ள நிலையில் இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாஜக, டி.ஆர்.எஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசும் வீடியோ ஆதாரங்களை சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ. 50 கோடி எனப் பேரம் பேசப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT