ADVERTISEMENT

ஓய்வுபெற்ற மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

11:32 AM Jun 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வங்கக்கடலில் உருவாகி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்த யாஸ் புயலால் ஏற்பட்ட சேதத்தை ஆய்வுசெய்த பிரதமர் மோடி, சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திற்கு வருகைதந்தார். அங்கு அவரும், மேற்கு வங்க முதல்வரும் புயல் பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், மம்தாவும் மேற்கு வங்க தலைமைச் செயலாளரும் இந்தக் கூட்டத்திற்குத் தாமதமாக வந்ததாகவும், வந்தவுடன் கிளம்பிவிட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்த சில மணிநேரங்களிலேயே, மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் இடமாற்றம் செய்யப்பட்டு, மத்திய அரசுப் பணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, பிரதமரின் அனுமதியுடன்தான் கூட்டத்திலிருந்து சென்றதாக விளக்கமளித்ததோடு, பிரதமரைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கும் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் இதுதொடர்பாக மம்தா பிரதமருக்குக் கடிதமும் எழுதினார்.

மம்தாவின் கோரிக்கைக்குப் பதில் வராத நிலையில், நேற்று (31.05.2021) மாலை அலபன் பாண்டியோபாத்யாய் ஓய்வுபெற்றுவிட்டதாகவும், அவர் மேற்கு வங்க அரசின் ஆலோசகராக மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார் எனவும் மம்தா அதிரடியாக அறிவித்தார். இந்தநிலையில், பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் கேட்டு அலபன் பாண்டியோபாத்யாய்க்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அந்த நோட்டீஸிற்கு மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT