ADVERTISEMENT

“வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்; விசாரணையில் பாரபட்சத்திற்கு இடமில்லை” - மத்திய அமைச்சர்

12:01 PM Jun 03, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். வழக்கின் விசாரணையில் எந்த வித பாரபட்சத்திற்கும் இடமே இல்லை என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய பொருளாதார மாநாட்டில் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “பிரிஜ்பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு நியமித்த குழுவின் அறிக்கையை தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் நாம் விரும்புகிறோம். ஆனால் அது உரிய சட்ட நடைமுறைக்கு பின்னர் தான் அது நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் எந்த விதமான பாரபட்சத்திற்கும் இடமில்லை. விரைவில் டெல்லி போலீஸ் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.

பாரபட்சமற்ற விசாரணைக்கு ஆதரவாகத்தான் அரசு உள்ளது. மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் உரிய சட்ட நடைமுறைக்குப் பின்பே அது நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் பாரபட்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி போலீஸ் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம். விரைவான விசாரணைக்கு ஆதரவாகவே நாங்கள் உள்ளோம். பிரிஜ்பூஷண் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைப்பு, மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தை கவனிக்க ஒரு குழுவை நியமிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கேட்டுக்கொண்டது என மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் அரசு ஏற்றது. ஒரு வீராங்கனைக்கு எதிராகவோ அல்லது ஒரு பெண்ணுக்கு எதிராகவோ அராஜகம் நடந்தால், உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க வேண்டும். என்றார்.

மேலும், பிரிஜ் பூஷன் தொடர்பாக மல்யுத்த வீராங்கனைகள் குறிப்பிடும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு எதிராக எந்த போலீஸ் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யலாம் என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள்தான் அரசு தலையிட வேண்டும் எனக் கூறியிருந்தார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT