Skip to main content

நள்ளிரவில் சந்திப்பு; உரிய நடவடிக்கை எடுப்பதாக அமித்ஷா உறுதி?

 

 reported that Union Home Minister Amit Shah has met the wrestlers

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார். 

 

இதையடுத்து டெல்லி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி  பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். அதில் பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன. மேலும் ஒரு வழக்கில் 18 வயதுக்குட்பட்ட வீராங்கனை சுமத்திய குற்றச்சாட்டு என்பதால் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் சரண் சிங் மீது கைது உள்ளிட்ட எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை விவசாய சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் சந்தித்தார். அப்போது 5 நாட்கள் கால அவகாசம் தருமாறு மல்யுத்த வீரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து  விவசாயிகள் தலைவர் ராகேஷ் திகாத் இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க ஜூன் 9 வரை மத்திய அரசுக்கு கால அவகாசம் வழங்கி கெடு விதித்து இருந்தார். 

 

இந்த நிலையில், போராடும் மல்யுத்த வீரர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனிய, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டவர்களை அமித்ஷா கடந்த சனிக்கிழமை நள்ளிரவு சந்தித்து பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !