ADVERTISEMENT

கெஜ்ரிவாலைத் தொடர்ந்து அகிலேஷ்; சம்மன் அனுப்பிய சி.பி.ஐ

08:26 AM Feb 29, 2024 | mathi23

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கடந்த 2012 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பதவி வகித்தார். அவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில், பொதுப்பணித்துறையினர் சட்டவிரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசியப் பதுமை தீர்ப்பாயம் தடைவிதித்திருந்த போதும் சட்டவிரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணை நடத்துமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், சி.பி.ஐ கடந்த 2016 ஆம் ஆண்டு முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்வர் அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.

ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ நேற்று சம்மன் அனுப்பி உள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று (29-02-24) நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பி இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. 7 முறை அவர் ஆஜராகாத நிலையில், 8வது முறையாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT