Skip to main content

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு; சம்மன் அனுப்பிய மதுரை போலீசார்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
prosecution of enforcement officers; Madurai police sent the summons

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

அதே சமயம் அங்கித் திவாரி, தான் பெற்ற லஞ்சப் பணத்தை தன்னுடன் பணியாற்றும் மேலும் சில அதிகாரிகளுக்கு வழங்கியதாகத் தெரிவித்திருந்தார். எனவே லஞ்சப் பணத்தில் வேறு யாருக்கேனும் பங்கு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்து திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 19 ஆம் தேதி  நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழ்நாடு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா ஆஜராகி பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் 75 அதிகாரிகளின் பட்டியலில் உள்ளது. அவர்கள் மீது வழக்குகள் உள்ளது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு கடந்த 20 ஆம் தேதி  வழங்கப்படும் என தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில்  லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி  அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக  அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விசாராணைக்கு வருமாறு அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு மதுரை தல்லாகுளம் போலீசார் தரப்பில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்