ADVERTISEMENT

9 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை!!! கேரளா விமான விபத்து...  உயிரிழப்பு 18 ஆக உயர்வு!!

08:17 AM Aug 08, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கேரளா கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்து 2 விமானிகள் உட்பட 18 பேர் என, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த கோரவிபத்தில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது.

இந்த விபத்தில் தற்பொழுது உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. விமானி டி. வசந்த் சாதே, துணை விமானி, ஒரு குழந்தை உட்பட 18 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 190 பேர் பயணித்த விமானத்தில் 14 பேர் படுகாயமும், 127 பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். 127 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. எஞ்சிய பயணிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல் தெரிவித்துள்ளார். விமானம் தீப்பிடித்திருந்தால் மீட்புப்பணிகள் மிகவும் கடினமாக இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் இரண்டு முறை தரை இறங்க முயன்றுள்ளது. சர்வதேச விமான ரேடார் இணையதளத்தில் இந்த தகவல் பதிவாகியுள்ளது. கோழிக்கோடு விமான நிலையத்தில் அனுபவமிக்க விமானிகளால் ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விமான நிலையம் பாதுகாப்பானது அல்ல என விமான பாதுகாப்பு நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது அதையும் மீறி இந்த விமான நிலையத்தில் விமான சேவை தொடர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

கோழிக்கோடு விமான நிலையம் டேபிள் டாப் விமான நிலையம் ஆகும். அதாவது, மலைக்குன்றின் மீது விமான ஓடுதளம் இருக்கும். இந்த வகையான விமான இறங்கு தளம் இந்தியாவிலேயே மூன்று இடங்களில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான விமானம் 13 ஆண்டுகள் பழமையான விமானம் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் அந்த விமான நிலையத்தில் இதுவரை 6 விபத்துகள் நடந்துள்ளது.

உயிரிழந்த விமானி வசந்த் சாதே இந்திய விமானப் படையின் முன்னாள் விங் கமாண்டர் என்பது தெரியவந்துள்ளது. 1981 ஆம் ஆண்டில் இந்திய விமானப் படையில் சேர்ந்து பணியாற்றிய வசந்த் சாதே திறமையான விமானி என்பதும், இதற்காக பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கேரளா விமான விபத்தில் சிக்கிய நீலகிரியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். நீலகிரி கூடலூரை சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விமானத்தில் இருக்கும் விபத்து தொடர்பான செய்திகளை அறிய உதவும் கருப்பு பெட்டியை கைப்பற்றும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT