ADVERTISEMENT

சமூக விரோதிகள் யார்? ரஜினியிடம் விசாரிக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

03:08 PM Jun 01, 2018 | Anonymous (not verified)


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஊடுருவியிருந்த சமூக விரோதிகள் யார் என ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும். அது போன்று எதுவும் இல்லை என தெரிந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள் தான் என அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது.. போராட்டத்தை சமூகவிரோதிகள் தான் உள்ளே புகுந்து கெடுத்தனர் எனக்கு அது தெரியும். ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ. அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள்.

இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்பு தான். சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. காவல்துறையை யூனிஃபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஆவேசமடைந்தார். மக்கள் போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றார்.

ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்களின் போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் அவர் மீது குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார்? என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவராஜ் என்பவர் அளித்த அந்த புகாரில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதுபற்றி அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வேண்டும். அப்போது அது போன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தால் பொய் பிரசாரம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

காலா படத்துக்கு என்ன விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT