ADVERTISEMENT

ஐஐடியில் கணபதி பாடல் பாடியதில் என்ன தவறு? எச்.ராஜா கேள்வி

11:21 AM Feb 27, 2018 | Anonymous (not verified)


சென்னை ஐ.ஐ.டி.யில் கணபதி பாடல் பாடியதில் என்ன தவறு? என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஐஐடி மையத்தில், தேசிய துறைமுக நீர்வழிப்பாதை கடற்கரை தொழில்நுட்பத்துறையை உருவாக்குவது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில்நுட்பத்துறைக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி தொடங்கும்போது, இரு மாணவர்களும், இரு மாணவியரும் சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை பாடினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அதே மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். தமிழகத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சென்னை அருகே பூந்தமல்லியில் திருகச்சி நம்பிகள், வரதராஜப் பெருமாள் கோயிலை பார்வையிட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,

தமிழக அரசு விஞ்ஞான முறையில் கோயில் நிலங்களை கொள்ளையடித்து வருகிறது. ஊழல் செய்யும் கோயில் செயல் அதிகாரியை கைது செய்யவேண்டும் என்றார்.

மேலும் ஐஐடியில் கணபதி பாடல் பாடியதில் என்ன தவறு? என்றும் கேள்வி எழுப்பிய அவர், காஞ்சிபுரம் மாவட்டம், பாலேஸ்வரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த சம்பவத்தை கண்டிக்காமல், சென்னை ஐஐடியில் கணபதி துதியை கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவ மிஷனரிகளின் கைக்கூலிகள் எட கடுமையாக விமர்சித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT