ADVERTISEMENT

புரட்டி எடுக்கும் கனமழை; உதவி எண்கள் அறிவிப்பு 

09:39 AM Dec 18, 2023 | mathi23

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (18.12.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய 4 மாவட்டங்கள் மற்றும் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதோடு திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் நாளை (18.12.2023) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகப் பல்கலைக்கழக பதிவாளர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைப்பது மற்றும் மறு தேதியில் நடத்துவது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் முடிவு செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அம்மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவிகளுக்கு உதவி எண்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாடு மையம் எண்ணான 1077 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு மக்கள் அவர்களுடைய அவசர உதவிகளை கேட்டுக்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார். மேலும், மாநில பேரிடர் கட்டுப்பாடு மைய எண்ணான 1070ஐ என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னக உதவி மைய எண்ணான 9445854718 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதே போல், திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு அவசர உதவிகளுக்கு 04622501012 என்ற எண்ணையும், கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அவசர உதவிகளுக்கு 04652231077 என்ற எண்ணையும், தென்காசி மாவட்ட மக்களுக்கான அவசர உதவிகளுக்கு 04633290548 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT