ADVERTISEMENT

ரஜினியின் பேச்சு மத்திய, கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது: திருமாவளவன்

09:37 AM May 31, 2018 | Anonymous (not verified)


ரஜினியின் பேச்சு மத்திய, கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர் என அவர் கூறியிருந்தார்.

தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது.. போராட்டத்தை சமூகவிரோதிகள் தான் உள்ளே புகுந்து கெடுத்தனர் எனக்கு அது தெரியும். ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ. அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள்.

இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்பு தான். சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. காவல்துறையை யூனிபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். மக்கள் போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என ஆவேசமடைந்தார். ரஜினியின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,

தியானம், யோகா என இமயமலை சென்றுவரும் ரஜினியிடம் சகிப்புத்தன்மையை எதிர்பார்த்தோம். ஆனால் அவர் கோபத்தை வெளிப்படுத்தியது வருந்தத்தக்கது. சமூகவிரோதிகள் யார் என ரஜினிகாந்த் தெளிவுப்படுத்த வேண்டும்.

திரையில் போராட அணி திரட்டும் ரஜினி, பொது வாழ்க்கையில் மாறுகிறாரா? அரசின் நடவடிக்கை சரி என்பதுபோல் வாதாடும் ரஜினியின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அவரின் பேச்சு மத்திய, கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலாக உள்ளது என அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT