ADVERTISEMENT

நிர்மலாதேவி கப்சிப்!  முருகன் உயிருக்கு அச்சுறுத்தல்! கேமராவைத் தட்டிவி்ட்டு நாளிதழ் செய்தியாளர் ரசாபாசம்!

08:07 PM Oct 31, 2018 | cnramki

ADVERTISEMENT

இன்று மதுரை மத்திய சிறைச்சாலையிலிருந்து, பேராசிரியை நிர்மலாதேவி, உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர், ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டனர்.

ADVERTISEMENT


போலீஸ் வேனிலிருந்து இறங்கிய முருகன் “இது ஒரு காட்டுத்தனமான allegation (குற்றச்சாட்டு). S.C. (பட்டியலினம்) என்ற ஒரே காரணத்துக்காக எனக்கு நீதி மறுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் இன்னும் 50 பேருக்கும் மேல் இருக்கிறார்கள். அந்தப் பட்டியலை வெளியிடுவேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். I want to discuss with you all the proofs in this case.. ok.. (நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.)” என்று உரத்த குரலில் பத்திரிக்கையாளர்களிடம் சொல்லிவிட்டு, நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறினார்.

விசாரணை முடிந்து கோர்ட்டுக்கு வெளியே வந்தபோது இறுகிய முகத்துடன் காணப்பட்ட முருகன் செய்தியாளர்களிடம் வாய் திறக்கவில்லை. ‘போகும்போது ஆக்ரோஷமா பேசினீங்க.. இப்ப ஏன் எதுவும் பேச மாட்டேங்கிறீங்க.. ஒரு சில நிமிடங்களில் உங்களின் கவனம் திரும்பியதற்கு என்ன காரணம்?’ என்று முருகனின் பின்னால் ஓட்டமும் நடையுமாகச் சென்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க, “நான் கோர்ட்ல பார்த்துக்கிறேன் சார்..” என்றார் சுரத்தில்லாமல்.

நிர்மலாதேவியை செய்தியாளர்கள் பக்கம் திரும்பக்கூட அனுமதிக்கவில்லை மகளிர் காக்கிகள். நீதிமன்றத்தில் ஒரு விசாரணை கைதியிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிமுறைகளுக்கு மாறாக, நிர்மலாதேவியின் கையைப் பிடித்து இழுத்தபடியே சென்றனர். ‘முருகன் நிறைய உண்மை பேசுவார்’ என்ற எதிர்பார்ப்பில் இருந்த செய்தியாளர்கள், முன்னதாக கோர்ட்டிலிருந்து வெளியேறிய நிர்மலாதேவியை பெரிதாகக் கண்டுகொள்ளாமல், முருகனுக்காகக் காத்திருந்தனர். அவரோ, அச்சுறுத்தலின் காரணமாக எதுவும் பேசவில்லை. அந்த 50 பேர் பட்டியலை அவர் வெளியிட்டுவிடக் கூடாது என்ற பதற்றமோ என்னவோ, எஸ்கார்ட் போலீசார் அவரை அவசர அவசரமாக வேனுக்குள் இழுத்துச் சென்றனர்.


அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும் முருகன் “நாளிதழில் வந்த நிர்மலாதேவியின் வாக்குமூலம் பொய்யானது. அந்த வாக்குமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் எந்தக் குற்றத்தையும் நான் செய்யவில்லை. அது பொய்யான குற்றச்சாட்டு.” என்று திட்டவட்டமாக மறுத்தார். போலீஸ் வேன் கிளம்பிய நிலையில், கருப்பசாமியும் செய்தியாளர்களிடம் “வாக்குமூலம் என்ற பெயரில் நாளிதழில் வெளியான அனைத்துமே பொய். வேண்டுமென்றே அப்படி சொல்லியிருக்கின்றார்கள்.” என்று திடமாக மறுத்தார்.


செய்தியாளர்களிடம் முதலில் பேசியபோது முருகனிடமிருந்து வெளிப்பட்ட தைரியம், கோர்ட்டிலிருந்து கிளம்பும்போது பயமாக மாறியதற்கான காரணத்தை, முருகனின் உறவினர்கள் நம்மிடம் நடுக்கத்துடன் சொன்னார்கள். “எஸ்கார்ட் போலீசார் பத்திரிக்கையாளர்களிடம் எதுவும் பேசக்கூடாது என்று கடுமையாக மிரட்டியிருக்கின்றனர். மீறிப் பேசினால், இந்தக் கோர்ட்டுக்கு இனி நீ வர முடியாது என்று உயிர் பயத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.” என்றனர்.

கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்த நிர்மலாதேவியின் வாக்குமூலம் குறித்து முருகன் மற்றும் கருப்பசாமியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டு, “அது பொய்” என்று இருவரும் மறுத்தபோது, அவர்களின் குமுறலை சேனல்காரர்கள் வீடியோ எடுத்துவிடாதபடி, சம்பந்தப்பட்ட நாளிதழின் வெளியூர்ச் செய்தியாளர் ஒருவர், உள்ளே புகுந்து கத்தித் தடுத்து, கேமராவையும் தட்டிவிட்டு, ஏனோ இடையூறு செய்தார். அதனால், முருகன் மற்றும் கருப்பசாமியிடம் தொடர்ந்து கேள்வி கேட்டு, பதில் பெற முடியாத நிலையில், போலீஸ் வேன் விருட்டென்று கிளம்பியது. இதனால், கோர்ட் வளாகத்திற்குள்ளேயே, ஸ்ரீவில்லிபுத்தூர் ஊடகவியலாளர்களுக்கும் அந்த நாளிதழ் செய்தியாளருக்கும் இடையில் ஒருவித ரசாபாசமானது.
திட்டமிட்டு மறைக்கப்படும் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு செய்தியாளர்கள் எத்தனை போராட வேண்டியிருக்கிறது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT