ADVERTISEMENT

தி.மு.க.-வினர் நடத்திய பிறந்தநாள் பார்ட்டி! 50 பேருக்கு கரோனா! அதிரடி காட்டிய போலீஸ்!

11:11 AM Jun 22, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் பாதித்து வரும் நிலையில், இது குறித்து எவ்வித கவலையுமின்றி கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் 50-ஆவது பிறந்த நாளை தடபுடலாகக் கொண்டாடியிருக்கிறார்.

ADVERTISEMENT

செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரவுடிகள் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். மதுபாட்டில்களோடு அசைவ விருந்துகளுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தி.மு.க. குணசேகர்.

ஊரடங்கை மீறியும் கரோனா பரவல் குறித்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியும் குணசேகர் நடத்திய இந்தக் கொண்டாட்டம் தி.மு.க.-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.-வைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணுவின் வலது கரமாக இருப்பவர் குணசேகர். செம்மரக் கடத்தல் தொழிலில் தொடர்புடைய இவர், ஆறு வருடங்களுக்கு முன்பு செம்மரக் கடத்தல் வழக்கில் சிறைச் சென்றிருக்கிறார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகவும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் இருக்கிறார் குணசேகர்.

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது தோப்பில் 500 - க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் செம்மரக் கடத்தல் தொழில் செய்பவர்களுடன் தனது 50-ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.

200-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் எனத் தடபுடலாக நடைபெற்ற அந்த விருந்து கொண்டாட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க. சேர்மன் சிவக்குமார் மற்றும் குணா ஆகியோரும் விருந்தில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய குணசேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ரவுடி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் 15 பேருக்கும் கரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கரோனா பயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வில்லங்கம், தி.மு.க. தலைமைக்கும் பொது வெளியிலிலும் தெரிந்தால் தனக்கு சிக்கலாகி விடும் எனக் கருதி, அனைவரையும் தலைமறைவாக இருக்கச் சொல்லியிருக்கிறாராம் திமுக மாவட்டச் செயலாளர் வேணு.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தி.மு.க. நிர்வாகிகளுடன் போராடி வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஊரடங்கை மீறி இத்தகைய கூத்துகளை நடத்திய குணசேகர் உள்ளிட்ட மாவட்ட தி.மு.க.-வினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என திருவள்ளுர் தி.மு.க.-வில் எதிரொலிக்கிறது.

மதுக்கடைகள் திறக்கப்படாத போதும் எப்படி இவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கிடைத்தது? பார்ட்டியில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த நிலையில், குணசேகர் உள்பட 50 தி.மு.க.-வினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது ஆரம்பாக்கம் காவல்துறை!

இந்த விவகாரம், திருவள்ளுர் மாவட்ட தி.மு.க.-வில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT