/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/450_16.jpg)
திமுக பிரமுகரின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளான கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினராக பதவி வகித்து வரும் இவர், கடந்த ஜூன் 14-ஆம் தேதி கண்ணம்பாளையம் கிராமத்திலுள்ள தனக்குச் சொந்தமான மாந்தோப்பு பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாகக்கொண்டாடினார். இந்தப் பிறந்தநாள் விழாவில், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆன சென்னையைச் சேர்ந்த சாமி நாதனும் கலந்துகொண்டு சால்வை அணிவித்து திமுக பிரமுகர் குணசேகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, அங்கு நடைபெற்ற விருந்திலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் ஒரு வார காலத்திற்கு பின்னர் திமுக பிரமுகர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் சிலருக்கு காய்ச்சல், சளி இருமல் போன்றவை இருந்ததால் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் குணசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட சிலருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட திமுக பிரமுகரும் அவரது சகாக்களும் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையிலும்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக அப்போது விசாரணை நடத்திய ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளர் வெங்கடாஜலம், விதிகளை மீறிபிறந்த நாள் விழா கொண்டாடிய திமுக பிரமுகர் உள்ளிட் 30-க்கும் மேற்பட்டோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். திமுக பிரமுகர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று தொற்றுக்கு ஆளாகிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)