ADVERTISEMENT

தமிழகத்தை போதை பூமியாக்கும் ஆந்திரா – கடத்தலுக்கு பயன்படும் தமிழக சாலைகள்.

10:30 AM Apr 30, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

கடலூர் – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்டியான்பேட்டை (வேலூர் மாவட்டம்) யில் கடந்த 28ந்தேதி மாலை மகாராஷ்ட்டிரா பதிவெண் கொண்ட (எம்.எச்18 டபள்யூ5964) மகேந்திரா டெனால்ட்டு ரீகன் காரை தடுத்து நிறுத்தியது வேலூர் போதைப்பொருள் நுண்ணரிவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோகிலா தலைமையிலான டீம்.

அந்த காரில் இருந்து 74 கிலோ கஞ்சாவை கைப்பற்றியது. அதன் மதிப்பு தமிழகத்தில் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய். கார் ஓட்டிவந்தனை பிடித்த விசாரித்தபோது அவுரங்காபாத் கன்னாட் தாலுககா ஹஸ்டா கிராமத்தை சேர்ந்த சுனில்அசோக் என்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கர்நாடகா மாநிலம் பெங்களுரூவுக்கு கொண்டு செல்வதாக கூறியவனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த டிசம்பர் 27ந் தேதி ஆந்திராவை சேர்ந்த ரத்தினகுமார், சாய்குமார் 110 கஞ்சா மூட்டைகளை காரில் கேரளாவுக்கு கடத்தி சென்றபோது தூத்துக்குடி போதைபொருள் தடுப்பு நுண்ணரிவு போலிஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அதே டிசம்பர் 6ந்தேதி திண்டுக்கல்லில் ஆந்திராவில் இருந்து 150 கிலோ எடையுள்ள 15 லஞ்சம் மதிப்புள்ள கஞ்சா மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தி சென்ற சசிகுமார், அவரது ஆந்திரா பதிவெண் கொண்ட காரை மடக்கினர். இப்படி வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை, திருவள்ளுவர் என தமிழகம் முழுவதும் மாதம் 25 வழக்குகள் கஞ்சா கடத்தல் வழக்குகளாக பதிவாகிறது.

இதுப்பற்றி வேலூரை சேர்ந்த போதைப்பொருள் நுண்ணரிவு பிரிவு அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, மாதாமாதம் கஞ்சா மூட்டைகள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் விஜயவாடாவில் இருந்து கார்களில் கொண்டுவரப்படும் கஞ்சா மூட்டைகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. கேரளா, கர்நாடாகாவுக்கும் ஆந்திராவில் இருந்து தமிழக சாலை வழியாகத்தான் செல்கிறது. இதனை தடுப்பது சிரமமாகவுள்ளது.

தமிழகம் – ஆந்திரா எல்லையோர மாவட்டம்மென்றால் கஞ்சா உற்பத்தி செய்வது யார் என கண்டறிந்து பிடித்துவிடலாம். இது ஆந்திராவின் உள்மாவட்டங்களாக உள்ளது, ஆந்திரா காவல்துறையின் ஒத்தெழைப்பு இதில் குறைவாக உள்ளதால் கடத்தல் ஏரியாவுக்குள் செல்ல முடியவில்லை என்றார்.

ஆந்திராவில் நமக்கு தெரிந்த சோர்ஸ்களிடம் கஞ்சா பற்றி விசாரித்தபோது, விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் ஏக்கர் கஞ்சா பயிரப்பட்டுள்ளதாக ஆந்திராவின் அதிகாரப்பூர்வ தகவல் சேமிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆனால் விசாகப்பட்டினம் உளவுத்துறை அதிகாரிகளோ ஆந்திரா – ஓடிசா எல்லையில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கர் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். தாராகொண்டா, பத்தகொண்டா, கொரூகொண்டா, பாலாபம், ஜீமடகுலா, பீடிபயலு, முஞ்சிங்குபட் தாலுக்காக்களில் தான் அதிகளவில் கஞ்சா பயிரிப்பட்டுள்ளன என அரசாங்கம்மே கூறுகிறது.

சில மாதத்துக்கு முன்பு ஆந்திராவின் எக்சைஸ் டிபார்ட்மெண்ட் போதைபொருள் தடுப்பு பிரிவின் இயக்குநர் வெங்கடேஷ்வரராவ் தலைமையிலான டீம், படேரூ, பீடபயலு, சிந்தப்பள்ளி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஏக்கர் கஞ்சா தோட்டத்தை கண்டறிந்து போலிஸ் உதவியுடன் அழித்தது. ஆந்திராவில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மகாராஷ்ட்டிரா, டெல்லி என இந்த 5 மாநிலங்களுக்கு தான் அதிகமாக அனுப்பப்படுகிறது.

விஜயவாடா, விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் தான் கஞ்சா அதிகமாக விளைவிக்கிறார்கள். அது நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள பகுதி என்பதால் காட்டுக்குள் சென்று அந்த தோட்டங்களை அழிக்க முடியவில்லை என்கிறது போலிஸ்.

காடு, மலையென சென்று அழிக்க முடியாது சரி. காட்டுக்குள் இருந்து வெளியே வந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு கடத்தப்படும்போது பிடிக்கலாம்மே?. விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு 799 கிலோ மீட்டர், வேலூருக்கு 867கி.மீ, கிழக்கு கோதாவரி மற்றும் விஜயவாடாவில் இருந்து சென்னை அல்லது வேலூருக்கு வருவதற்கும் இதே தூரம் கடந்து செல்ல வேண்டும். வழியில் சுமார் 10 சுங்கச்சாவடிகள் உள்ளன, இவைகளை தாண்டித்தான் வருகிறது. இங்குயெல்லாம் மடக்காமல் ஆந்திரா போலிஸ் என்ன செய்கிறது?.

கார்கள் வழியாக கடத்தப்படும் அதே அளவுக்கு இரயில்கள் மூலமாகவும் கடத்தப்படுகிறது. அதை இரயில்வே போலிஸ் நினைத்தால் தடுக்க முடியும். அவர்களும் தடுப்பதில்லை. அதற்கு காரணம் பணம். காவல்துறை, வனத்துறை அதிகாரிகளை கடத்தல் மாபியாக்கள் கவனிக்கும் விதத்தில் கவனித்துவிட்டு கடத்துகிறார்கள். தமிழகத்தில் சிக்குவதே இவ்வளவு என்றால் சிக்காமல் எவ்வளவு போகும் என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.


இந்தியாவின் உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய போதைப்பொருள் புலனாய்வு பிரிவு 2017 செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, இந்தியா முழுவதும் கஞ்சா கடத்திய வழக்கு மட்டும் 3507 பதிவாகி 1,11,222 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 2,94,347 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் அதிக வழக்குகள் பதிவாகும் போதைப்பொருள், கஞ்சா தான். கஞ்சாவுக்கு அடுத்த இடத்தில் விலை அதிகமான ஹெராயின், ஓபியம் போன்றவை உள்ளன. கஞ்சா அதிகம் உற்பத்தியாகும் பகுதி என அது ஆந்திராவையே குறிப்பிடுகிறது.

ஆந்திராவில் உற்பத்தியாகி தமிழகம், கேரளாவுக்கு கொண்டும் போய் விற்கப்படும் கஞ்சா 50 கிராம் பாக்கெட் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திராவில் வாங்கப்படும் ஒருகிலோ கஞ்சாவின் விலை 100 முதல் 200 ரூபாய் என்கிறார்கள்.

தமிழகத்தை கஞ்சா போதைக்கு அடிமையாக்குகிறார்கள் ஆந்திரா போதை பொருள் மாபியாக்கள். அதை கண்டுக்கொள்ளாமல் உள்ளது ஆந்திரா அரசாங்கம். தனது சொத்தான செம்மரம் வெட்டுகிறார்கள் எனச்சொல்லி தமிழக கூலி தொழிலாளர்களை சுட்டுக்கொன்றும், முறையற்ற வகையில் கைது செய்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூலி தொழிலாளர்களை சிறையில் அடைத்து வைத்துள்ளது ஆந்திரா காவல்துறை. தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாக்குவது ஆந்திராவில் உற்பத்தியாகும் கஞ்சா தான். அதை தமிழகம், கேரளா என கொண்டு சென்று விற்பதும் ஆந்திராக்காரர்கள் தான். அவர்களை என்ன செய்யப்போகிறது ஆந்திர அரசும், காவல்துறையும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT