ADVERTISEMENT

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி! : வலுக்கும் ஆதரவும் எதிர்ப்பும்

12:09 PM Sep 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களில் 10 வயதிற்கு மேல் 50 வயதுக்குட்டப் பட்டவர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தேவஸ்தானம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது. சபரிமலைக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்தீர்ப்பு குறித்து வலுத்து வரும் ஆதரவும் எதிர்ப்பும்:


தீர்ப்பு குறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ’’உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிக தீர்ப்பு. ஐயப்பன் மீதுபக்தி இல்லாத சில பெண்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உண்மையான ஐயப்ப பக்தர்கள் ஏற்க மாட்டார்கள். ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு வழிபாட்டு முறை இருக்கிறது. மத விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட உரிமையில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இந்து மத்திற்கு எதிரானவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வைகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐயப்பனின் புனிதத்தை கெடுக்கும் வகையில் உள்ள இந்த தீர்ப்பை எதிர்த்து சபரிமலை தேவஸ்தானம் மேல்முறையீடு செய்ய வேண்டும்’’என்று தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன், உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதரும் இத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து, ‘’சம உரிமையை கொடுத்திருக்கிறது இந்த தீர்ப்பு. பெண்களும் இறைவனை நம்பித்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்களை விட பெண்கள்தான் திருக்கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். திருவிழக்கு பூஜை, பஜனை என்று திருக்கோவில்களில் பெண்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

சபரிமலைக்குள் செல்ல பெண்களுக்கு அனுமதி உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் என்று நான் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சொன்னேன். பாகுபாடு பார்க்காமல் அனைத்து வகையான பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிப்பதுதான் நியாயமானது. இதில் கோயிலின் புனிதன் கெடுவதற்கு எந்த வகையான வாய்ப்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.

மாதவிலக்கு பெண்களால் புனிதம் கெடும் என்கிறார்கள். மாதவிலக்கு பெண்கள் கோவிலுக்கு வருவதை எப்படி சோதனை செய்வீர்கள்? பெண் காவலர்களை நியமிப்பீர்களா? இதில் ஏமாற்றிச்செல்லக்கூடிய பெண்கள் இருக்கலாம் அல்லவா? அதனால் வயது வரம்பு பார்க்காமல் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தீர்ப்பு கொடுத்திருப்பது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அனுபவத்தை, ஆற்றலை, முதிர்ச்சியை காட்டுகிறது. கோயிலின் புனிதம் கெடாது என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன். ஒன்றரை ஆண்டுகள் விசாரணை நடத்தி அனுபத்தின் அடிப்படியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை உண்மையில் பாராட்டுகிறேன்’’ என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பினால் ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மாற்றுத்திறன் மகளிர் வாழ்வுரிமை அமைப்பின் லலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.

சிபிஎம் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, ’’இது ஒரு நல்ல தீர்ப்பு. மத்திய அரசுடன் கேரள அரசு இணைந்து உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்தவேண்டும். ஆண்கள் கோவிலுக்குள் போனால் புனிதம் கெடாது. பெண்கள் கோவிலுக்குள் போனால் புனிதம் கெட்டுவிடுமா என்ன? கெட்டுவிடும் என்று இவர்களாகவே கற்பனை செய்துகொள்கிறார்கள். மனித குலத்தின் வளர்ச்சிகு பெண்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். தேவஸ்தானம் உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்வதாக சொல்வதில் உடன்பாடு இல்லை. இந்த தீர்ப்பு பெண்ணுரிமையை வலியுறுத்துகிறது. இந்த தீர்ப்பு நல்ல தீர்ப்பு. இதில் சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டாம். இளம்பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல விரும்பினால் அவர்களுக்கு அனுமதி வழங்க அரசுக்கும் நீதித்துறைக்கும் கடைமை இருக்கிறது. அந்த முறையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்’’என்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியது மாதிரியே, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று சபரிமலை தேவஸ்தானம் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT