Skip to main content

தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்கும் அளவுக்கு தெம்போ, திராணியோ யாருக்கும் கிடையாது - திருமாவளவன் தடாலடி பேச்சு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

jkl

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர்கள் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்த தினம் இனி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்குப் பலர் மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் மட்டும்தான் கொண்டாடப்பட வேண்டியவரா? அவரையும் தாண்டி கொண்டாட தகுதியான நபர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று கருத்து தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த சம்பவம் தொடர்பாகவும், தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் தொடர்பாகவும் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "பெரியார் சமூகநீதிக்காக இறுதி காலம்வரை பாடுபட்டவர். சமூகநீதி விவகாரத்தில் அவர் இறக்கும்வரையில் பின்வாங்காதவர். வருகின்ற 17ஆம் தேதி பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளோம். அப்போது சமூகநீதி தொடர்பாக பேரவையில் தெரிவித்த கருத்துகளை அவர் சிலை முன் முழக்கமிட உள்ளோம். பெரியாரை யாரும் புறக்கணித்துவிட முடியாது. தற்போது தமிழகத்தில் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களைக் காங்கிரஸ் கட்சி எழுப்பியுள்ளது. அவர்களின் ஐயங்கள் புறந்தள்ள கூடியதாக இல்லை. 

 

அவர் நாகலாந்தில் என்ன செய்தார் என்று நாம் தற்போது சமூகவலைதளங்களில் வரும் கருத்துகளைப் பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்துள்ளார். மேலும், மொழி உணர்வு போன்ற எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற எண்ணம் உடையவராக அவர் இருப்பதாக தகவல் வெளிவருகிறது. எனவே திட்டமிட்டு அவரை நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. விடுதலைச் சிறுத்தைகளும் மத்திய அரசு ஏதோ உள்நோக்கத்தோடு இந்த ஆளுநர் நியமனத்தை செய்துள்ளதாகவே பார்க்கிறோம். எனவே மத்திய அரசு, புதிய ஆளுநர் நியமனத்தை ரத்து செய்துவிட்டு, ஜனநாயகப்பூர்வமாக செயல்படுபவரை ஆளுநராக நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். யாரை ஆளுநராக நியமித்தாலும் தமிழ்நாட்டில் அவர்களால் எதுவும் செய்துவிட முடியாது. ஆட்சியைக் கலைக்கின்ற அளவுக்கு அவர்களுக்குத் தெம்போ, திராணியோ கிடையாது" என்றார்.