Skip to main content

"சசிகலா பேச்சு என்பது தொண்டர்களுக்கு ஊக்க மாத்திரை; தலைவர்களுக்கு அழைப்பு சிக்னல்.." - உடைத்து பேசும் வழக்கறிஞர் பாலு!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

v

 

சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு அமைதியாக இருந்த சசிகலா, கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "கடந்த 5 ஆண்டுகளாக மனிதல் இருந்த பாரத்தை தற்போது இறக்கிவைத்துள்ளேன். அதிமுகவை தலைவரும், அம்மாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் நான் இங்கிருந்து புறப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு உள் அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

"நான் புறப்படுகிறேன் என்று அவர் கூறியதாக சொன்னீர்கள், அதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. நான் வந்திருக்கிறேன் என்று அவர் கூறியதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். விஜயகாந்த் படத்தில் ஒரு வசனம் சொல்லப்பட்டிருக்கும், நீங்கள் பழைய பன்னீர்செல்வமாக வர வேண்டும் என்று, அதைப் போல அவர்களின் பேச்சு இருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஜெயலலிதாவோடு வழக்கில் சேர்க்கப்பட்டு, தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டதால் இவர் சிறைக்குச் சென்று திரும்பியுள்ளார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூட அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பது இயல்பான ஒன்றாகவே இருந்தது. 

 

அன்றிருந்த அரசியல் சூழ்நிலை அதை திசை திருப்பிய நிலையில், அப்போது இருந்த முதல்வரும், அமைச்சர்களும் அந்த சம்பவமே நடைபெறாதது போல பார்த்துக்கொண்டார்கள். இவ்வளவு காலம் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்ததாக நாம் பார்க்க தேவையில்லை. தனக்கான நேரத்தை இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் எடுத்துக்கொண்டார் என்ற அளவிலே அதனை நாம் பார்க்க வேண்டும். அப்போதும் கூட அவர் தொண்டர்களுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டுதான் இருந்தார். தான் இருக்கிறேன் என்பதை அவர் வாய்ப்பு கிடைத்த இடத்தில் அனைத்தும் நிரூபித்துக்கொண்டுதான் இருந்தார். நான் கூட்டைவிட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கட்சியினருக்கு அவர் அறிவித்துள்ளார். அவர் அங்கு பேசிய வார்த்தைகளையும் நாம் கவனிக்க வேண்டும். மிகவும் மெச்சூரான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர் பேசியுள்ளார். இது கட்சியினருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது. அவரின் பேச்சு என்பது தொண்டர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஊக்க மாத்திரை, தலைவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற அழைப்பு என்பதுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது" என்றார்.