Skip to main content

அரசியல் குழப்பம்...! -பிரதமர் வேடத்தை மாற்றுகிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

இந்தியா என்பது மொழி, இனம், கலாச்சாரம், பண்பாடு, சமய வழிபாடு என பன்முக தன்மை கொண்ட நாடு இந்த பரந்துபட்ட தேசம் குடியாட்சி முறையில் ஜனநாயக அமைப்பு என்ற அரசியல் சட்ட அச்சாணியை கொண்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது நாட்டின் மூலம். ஆனால் இந்த அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் ஆயுதம் தான் ஒரே தேசம்.. ஒரே சட்டம்.. என்பது, இதில் தான் மத அடிப்படைவாத கொள்கையை மட்டுமே ஓங்கி பிடிக்கும் அமைப்பு வருகிறது. மதரீதியாக மனித குலத்தை பிரிப்பதால் கலவரம், அழிவு என்ற அபாயம் இதன் மூலம் ஏற்படுகிறது.

 

modi

 

கட்சிகளாக உள்ள ஒவ்வொரு அரசியல் இயக்கமும் அதுவே தனது தலைவரை தேர்ந்தெடுக்கும். ஆனால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் தான் பாஜகவின் தலைவரை தேர்ந்தெடுக்கிறது. இதன் தலைமையகம் நாக்பூர். இது தான் நமது நாட்டின் இரண்டாவது அதிகார மையமாக செயல்படுகிறது.
 


ஆம் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தியதும் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர் மோடிக்கு ஆளுமை கொடுத்து பிரதமர் என்கிற காவல்காரராக வேலை வாங்குவதும் ஆர்.எஸ்.எஸ். என்கிற அதிகார பீடம் தான். இதன் தலைவர் மோகன் பகவத். இவரது ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் நகர்வுகளை கொண்டது. இவர்தான் சென்ற 6ந் தேதி முதல் 9ந் தேதி வரை ஈரோட்டில் முகாமிட்டிருந்தார்.
 

 
முக்கிய வி.ஐ.பி.யான இவருக்கு நாட்டின் ஜனாதிபதியை காட்டிலும் கூடுதல் பாதுகாப்பு ஈரோட்டில் கொடுக்கப்பட்டது. ஈரோடு யு.ஆர்.சி. என்கிற தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.பயிற்ச்சி முகாமில் நான்கு நாட்களும் கலந்து கொண்டார் மோகன் பகவத். முகாமில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடம் பேசினோம் "இந்த பயிற்சி முகாம் மொத்தம் 23 நாட்கள் நடக்கிறது. ஏற்கனவே முதலாமாண்டு 22 நாட்கள் பயிற்சியை முடித்தவர்கள் தான் இந்த இரண்டாம் ஆண்டு பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். அப்படி தேர்வானவர்கள்தான் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 80 பேர், இதில் கலந்துள்ளோம்.  இதற்கு பெயர் பண்பு பயிற்சி. அதிகாலை 4.30 விழிக்க வேண்டும். யோகா, தியாணம், உடற்பயிற்ச்சி, தற்காப்பு மட்டுமல்லாமல் இந்து மத கோட்பாடுகளை, சட்ட விதிகளை கற்றுக் கொள்வது, மதத்திற்கு எதிரான போக்குகளை கையாளும் விதம், இந்து மதத்தின் தனி தன்மையை காக்கும் பயிற்சி, இந்து அரசியல் வகுப்புகள் இப்படி பல பயிற்சி செயல்பாடுகள் இதில் உள்ளது. 



உடல் கட்டுப்பாடு ஒரே சிந்தனையில் மன ஒட்டத்தை ஈடுபடுத்துவது என்ற கடுமையான வழிமுறைகளும் உண்டு. இதை முடித்த பிறகு மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாம் என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் நாக்பூர் தலைமையகத்தில் தான் நடக்கும் இதில் கலந்து கொண்டு தேர்வாகிறவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவார் அதாவது உதாரணத்திற்கு ஆர்.எஸ்.எஸ். என்பது திராவிடர் கழகம் போல் தி.மு.க., அ.தி.மு.க. என்பது தி.க.வின் அரசியல் அமைப்பு அது போல தான் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் முதல் அரசியல் கொள்கை பரப்பு அமைப்பு.  இளைஞர் அணி, மாணவர் அணி, என்பது போலத்தான் பஜ்ரங்தள் தொடங்கி இந்து முன்னணி வரை ஆர்.எஸ்.எஸ்.சின் 58 பரிவார் அமைப்புகள் நாடு முழுக்க உள்ளது.
 


நாக்பூரில் பயிற்சி முடித்து தேர்வாகிறவர்கள் இப்படி ஏதாவது ஒரு அமைப்பில் மாநில பொறுப்புக்கு நியமிக்கப்படுவார்கள் அவர்களின் திறன் சார்ந்து மேல் பொறுப்புக்கு கொண்டு செல்லும் ஆர்.எஸ்.எஸ்.தலைமையகம். அப்படி வந்தவர் தான் பிரதர் நரேந்திரமோடியும் அமித் ஷாவும்" என விரிவாக கூறினார்கள். 



இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் கலந்து கொள்ளும் அளவுக்கு  இந்த பயிற்சி முகாம் முக்கியத்துவம் பெற்றுள்ளதா, அவர் என்னென்ன பேசினார் என நாம் கேட்டதற்கு "தலைவர் ஜி இந்து மத பண்புகள் பற்றிய பயிற்சி வகுப்பெடுத்தார். பல்வேறு வகுப்புகளில் கலந்து கொண்டு அறிவுறுத்தல் செய்தார், மற்றபடி வெளிப்படையான அரசியல் எதுவும் அவர் பேசவில்லை. 2020 க்குள் தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமத்தில் கூட ஆர்.எஸ்.எஸ்.சின் பரிவார் அமைப்புகள் ஏதாவது ஒன்றில் குறிப்பாக இந்து முன்னணியில் 20 பேர் தீவிர தொண்டர்களாக இருக்கு வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஒரு வார்டுக்கு 20 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் இந்த இருபது பேரும் குறைந்த பட்சம் இருநூறு இந்து குடும்பத்தோடு தொடர்பில் இருக்க வேண்டும். பக்தி வடிவில் அவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 2020 க்கு பிறகு இந்தியா ஒரு இந்து நாடு என்கிற அரசியல் அமைப்புக்குள் வர வேண்டும் என்பது தான் திட்டம். இதை மையப்படுத்தி இயக்கத்தை வளர்க்க சொன்னார் என்றவர்கள். "தலைவர் ஜி தங்கியிருந்த நான்கு நாட்களில் பா.ஜ.க. தென் மாநில தலைவர்கள் பலரும் வந்து சந்தித்து விட்டு சென்றுள்ளார்கள். தேர்தல் முடிவில் பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் தலைவர் ஜி யும் கூறியுள்ளார். ஆனால் ஒவ்வொரு மாநில கட்சிகளின் பட்டியலை எடுத்து வைத்துள்ளதாகவும் அரசியல் சூழலை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்தி மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளார். கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடி ஜி செய்தது நாட்டின் உயர் பொறுப்பு முழுக்க, அதாவது அதிகாரத்தை கையில் வைத்துள்ள உயர் அதிகாரிகள் பலரும் ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுகூலமானவர்களே, இப்போது அவர்கள் மீண்டும் பா.ஜ.க.வை அதிகாரத்தில் அமர்த்தவே மறைமுக பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முறையும் மோடியை பிரதமராக்கிவிட்டு இடையில் மற்றொரு முகத்தை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ்.தலைமை முடிவு செய்திருப்பது தலைவர் மோகன் பகவத் ஜி யின் பேச்சிலிருந்து தெரிகிறது" என்றனர்.
 

 
பா.ஜ.க.வை மீண்டும் அரியணையில் அமர்த்த வேண்டும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும் போது மோடிக்கான பிரதமர் வேடத்தை எடுத்து விட்டு புதிய நபர் ஒருவருக்கு மகுடம் சூட்ட முடிவு செய்துள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைமை.
 

 

 

 

சார்ந்த செய்திகள்