Skip to main content

ரஞ்சிக் கோப்பையை பற்றித் தெரிந்தவர்களே, இவரைப்பற்றி தெரியுமா???

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
ranjithsinghji

 

 

இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான கோப்பை, முக்கியமான போட்டி ரஞ்சி. இந்திய அணியில் இருக்கும் பலரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியவர்களாகவே இருப்பார்கள். இப்படியாக நம் அனைவருக்கும் ரஞ்சிக் கோப்பை பற்றி தெரியும், ஆனால் நம்மில் பலருக்கு இவரைப்பற்றி தெரியாது. அவர்தான் கே.எஸ்.ரஞ்சித்சிங்ஜி இந்தியாவின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீரர்.

 

குஜராத், கத்தியவாரில் பிறந்த ரஞ்சித் நாவாநகரை ஆட்சிசெய்த மன்னர் குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட்டின் மீது பேரார்வம் கொண்டு இங்கிலாந்து சென்ற அவர், கேம்ப்ரிட்ஜ் அணியில் இடம் பிடித்தார். பேட்டிங்கில் அதிரடி காட்டிய அவர், அப்போதைய இங்கிலாந்து அணியிலும் இடம்பிடித்தார்.

 

மொத்தம் 15 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அவர், தனது பேட்டிங்கின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். தனது முதல் ஆட்டத்தில் 62, இரண்டாவது ஆட்டத்தில் 154 என அதிரடி மன்னனாய் விளங்கினார் (கிரிக்கெட்டில் மட்டுமல்ல, குஜராத்தின் ஒரு பகுதியான நவாநகருக்கும் இவர்தான் மன்னர்). அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இங்கிலாந்து சார்பாக களம் இறங்கினார். 

 

முன்னோக்கி அடித்தே (Forward Stroke) பழக்கப்பட்ட அன்றைய வீரர்களிலிருந்து இவர் வேறுபட்டிருந்தார். பேக் பூட் (Back Boot) என்ற உத்தியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவரும் இவரே. வலது கை பேட்ஸ்மேனான இவர் தான் விளையாடும் வரை சிறந்த பேட்ஸ்மென் என்ற புகழுடனேயே இருந்தார். இவரைப்பற்றி ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவலும் உலாவுகின்றன. ‘இவரால் ஹாக்கி பேட்டை வைத்துக்கொண்டுகூட பந்துகளை பவுண்டரிக்கு விரட்டமுடியும்’ இதுதான் அந்த தகவல். இவரின் நினைவாகத்தான் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான ரஞ்சி நடக்கிறது.