Skip to main content

ஆந்திரா வன்முறை; தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
andhra election incident Election Commission action

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 13 ஆம் தேதி (13.05.2024) வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இத்தகைய சூழலில் ஆந்திராவின் பல்வேறு இடஙகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது.

அதாவது பல்நாடு மாவட்டத்தில் உள்ள ரெண்டல கிராமத்தில் வாக்குச்சாவடி அருகே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு கட்சியினரும் ஒருவரையொருவர் கட்டையால் தாக்கி கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் 2 பேருக்கு தலையில் காயம் ஏற்பட்டன. இரு கட்சியினரும் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ள ஓட்டு பதிவிட முயன்றதாகக் கூறி இருவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி மோதலில் ஈடுபட்டனர். 

andhra election incident Election Commission action

மேலும் சித்தூர் தொகுதி குடிபாலா பகுதியில் தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர் சுரேஷுக்கு கத்தி குத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குண்டூர் மாவட்டம் தெனாலி சட்டமன்ற தொகுதியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சிவகுமார் அத்தொகுதியின் வேட்பாளராகவும் போட்டியிட்டார். இவர் தனது வாக்கை செலுத்த வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளார். அப்போது வரிசையில் நின்ற வாக்களார் ஒருவர் வரிசையில் நின்று வாக்களிக்க மாட்டீர்களா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் கோபமடைந்த எம்.எல்.ஏ. சிவகுமார் அந்த வாக்காளர் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டுள்ளார். அதன் பின்னர் வாக்காளரும் பதிலுக்கு எம்.எல்.ஏ. சிவகுமார் மீது அறை விட்டுள்ளார். இதனையடுத்து எம்.எல்.ஏ. சிவகுமாரின் ஆதரவாளர்கள் அந்த வாக்காளரை கடுமையாக தாக்கினர்.

இந்நிலையில் ஆந்திராவில் வாக்குப்பதிவின் போதும், அதன் பின்னரும் ஏற்பட்ட வன்முறையையொட்டி தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆந்திராவில் தேர்தலுக்கு பிறகு நடந்த வன்முறை சம்பவங்களை அடுத்து பல்நாடு, அனந்தபூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருப்பதி எஸ்.பி.யை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 3 மாவட்ட ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 3 மாவட்டங்களிலும் 12 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக ஆந்திர மாநிலத் தலைமைச் செயலர் மற்றும் போலீஸ் டிஜிபி தேர்தல் ஆணையம் முன் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்