Skip to main content

இதுக்கெல்லாமா என்கிட்ட பெர்மிஷன்... விருதுகளில் மயங்காத ரஜினி... ரஜினியின் திறமைக்கு விருது! 

Published on 07/11/2019 | Edited on 15/11/2019

"கௌரவத் தோற்றத்தில் அறிமுகம் ரஜினிகாந்த்'’-1975 ஆகஸ்ட் 18-ஆம் தேதி ரிலீசான கே.பாலசந்தரின் "அபூர்வ ராகங்கள்'’படத்தின் டைட்டில் கார்டில் இப்படித்தான் போட்டிருப்பார்கள். தொடர்ச்சியாக பாலசந்தரின் "மூன்று முடிச்சு', "அவர்கள்'’என இரண்டு படங்களில் வில்லனாகவே வந்தார் ரஜினி. 1977 செப். 15-ல் ரிலீசான பாரதிராஜாவின் முதல் படமான "16 வயதினிலே'’படத்திலும் பரட்டையாக வில்லத்தனம் பண்ணியிருந்தார் ரஜினி. இதற்குக் காரணம், "நாம இப்படியே வில்லனாவே நடிச்சுட்டுப் போயிருவோம்'' என்ற மனநிலையில்தான் ரஜினி இருந்தார். சிவாஜிராவ் என்ற தனது இயற்பெயரை "ரஜினிகாந்த்' என மாற்றி, தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலசந்தரிடம் ஆசி பெறும்போது கூட, ‘சார் நான் நல்ல வில்லன் நடிகனா பேர் வாங்கணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க சார்'' என்றார் ரஜினி. 

 

rajini



ஆனால் ரஜினியின் ஆசை ரொம்பநாள் நீடிக்கவில்லை. தயாரிப்பாளரும் கதாசிரியருமான கலைஞானம் தனது முதல் தயாரிப்பான "பைரவி'யில் வில்லன் ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே "சூப்பர் ஸ்டார்'’ பட்டமும் வந்தது. "பைரவி'’ ரிலீசான 1978-ஆம் ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக 20 படங்களில் நடித்தார் ரஜினி. தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ரஜினி பட போஸ்டராகவே இருந்தது. 
 

rajini



44 ஆண்டு காலம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை (இப்போது வரை) தக்க வைத்துக்கொண்டிருக்கும் ரஜினிக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருதை வழங்கி கௌரவித்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. வருகிற 20-ஆம் தேதி கோவாவில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தின்போது, தமிழ் சினிமாவிற்கு ரஜினி ஆற்றிய அளப்பரிய சேவையையும் பங்களிப்பையும் பாராட்டி "ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருதை ரஜினிக்கு வழங்குவதில் மத்திய அரசு பெருமிதம் கொள்வதாக பூரிப்புடன் அறிவித்திருக்கிறார் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இதே பா.ஜ.க. அரசு 2016-ல் ரஜினிக்கு "பத்மவிபூஷண்' விருது வழங்கி சிறப்பித்தது.

rajini



"அபூர்வ ராகங்கள்'’படத்தில், இரும்புக் கேட்டை திறந்தபடி "பைரவி வீடு இதுதானே' எனக் கேட்டுக்கொண்டே திரையில் ரஜினி அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே "ஸ்ருதி பேதம்'’என டைட்டில் போடுவார் கே.பாலசந்தர். ஆனால் இன்றுவரை மாஸ் ஹீரோ என்ற ஸ்ருதி குறையாமல் ரா(க)ஜ நடை போட்டுவருகிறார் ரஜினி.
 

rajini



44 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. இவற்றில் தோல்விப் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்போது 168-ஆவது படத்தை "சன் பிக்சர்ஸ்' தயாரிக்க, ’"சிறுத்தை' சிவா டைரக்ட் பண்ணுகிறார். சம்பளம் எவ்வளவு அதிகமாக கொடுத்தாலும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர்களில் நடிப்பதை ஏற்றுக் கொள்ளவே மாட்டார் ரஜினி. இதற்கு இரண்டு உதாரணங்கள் இருக்கிறது. பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான டி.என்.பாலு ஸ்ரீப்ரியாவை ஹீரோயினாகப் போட்டு, ‘"ஓடி விளையாடு தாத்தா'’என்ற படத்தை ஆரம்பித்தார்.
 

rajini



அதில் ஸ்ரீப்ரியாவிற்கு கணவராக யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு ஓடியபோது, அப்போது வில்லனாக இருந்த ரஜினியை சிபாரிசு செய்து, ரஜினியிடமும் பேசியுள்ளார் ஸ்ரீப்ரியா. அப்போது வளரும் நடிகராக இருந்தபோது, அந்த கேரக்டரை ஏற்க மறுத்துவிட் டார் ரஜினி. அதேபோல் ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படமான "நீயா?'’ படத்திலும் பல கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி.

ரஜினியைப் பொறுத்தவரை கதை, கதாபாத்திரத் தேர்வில் மிகவும் கவனம் செலுத்துவார். "நாம நடிக்கும் படங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கணும், தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுக்கணும்'’ இதுதான் ரஜினியின் சினிமா பாலிஸி.

 

rajini



காதல் காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் கதாநாயகிகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்தாலும், பெண்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் ரஜினியோ இதற்கு நேரெதிரானவர். கதாநாயகிகளுடன் நெருக்கமாக நடித்தாலும் விரசம் தெரியக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, பெண்களின் மனதில் இடம் பிடித்தவர், பிடித்துக் கொண்டிருப்பவர் ரஜினி. இதேபோல் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தவர் என்பதால், குடும்பத்தின் அனைத்து வயதினரும் பாரபட்சமில்லாமல் ரஜினியை நேசித்துக் கொண்டிருக்கின்றனர். அதே போல் ரஜினியைப் பொறுத்த வரை, படத்தின் தயாரிப்பாளர் முதலாளி, அப்பட யூனிட்டின் கேப்டன் படத்தின் டைரக்டர் என்பதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பார். உதாரணத்திற்கு, நமக்கு ஏற்பட்ட ஒரு பட சம்பவம். ஆர்.எம்.வீ.யின் சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா டைரக்ஷனில் "பாட்ஷா'’படத்தில் கமிட் ஆகியிருந்தார் ரஜினி.

அப்போது நமது நக்கீரனிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த "ரஜினி ரசிகன்'’மாத இதழுக்காக, ரஜினியின் ஒவ்வொரு படத்தின் பிரத்யேக ஸ்டில்களை அட்டையிலும் ப்ளோ-அப்பாகவும் வெளியிடுவது வழக்கம். "ரஜினி ரசிகன்' இதழுக்காக ரஜினியும் ஸ்பெஷல் போஸ்கள் கொடுப்பார். இதனால் ரஜினி ரசிகர்களிடையே ரஜினி ரசிகனுக்கு ஏகோபித்த வரவேற்பு. அந்த வகையில் "பாட்ஷா' ’படத்தின் புது கெட்டப் ஸ்டில்ஸ் எடுக்க விரும்பி, விஜயா வாஹினி ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தோம்.

படத்தில் ரஜினி எண்ட்ரியாகும் "ஆட்டோக்காரன்... ஆட்டோக்காரன்' பாடல் காட்சி எடுப்பதற்காக செட் போட்டு ஏராளமான ஆட்டோக்களும் வந்திருந்தன. நாம் சென்ற நேரம் லஞ்ச் பிரேக் என்பதால், மேக்- அப் அறையில் சிறிது ஓய்வில் இருந்தார் ரஜினி. நாம் வந்த விஷயத்தை அப்போது ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஜெயராமனிடம் சொன்னோம்.

"அரைமணி நேரம் கழிச்சு சாரிடம் கேட்டுவிட்டு சொல்றேன்'' என்றார் ஜெயராமன். சொன்னபடியே அரைமணி நேரம் கழித்து ரஜினியிடம் தகவல் சொல்ல, மாடியிலிருந்து இறங்கி வந்த ரஜினி நம்மைப் பார்த்ததும், ""வந்து ரொம்ப நேரமாச்சா, சாப்ட்டீங்களா'' என அன்புடன் விசாரித்ததும், "சார் இந்த கெட்டப்புல (ஆட்டோ டிரைவர்) உங்கள ஸ்டில்ஸ் எடுக்கணும்'' என்றோம்.


"ஓ.கே. தாராளமா எடுங்க, அதுக்கு முன்னால டைரக்டர்கிட்ட பெர்மிஷன் வாங்கிருங்க. ஷாட் பிரேக்ல எடுத்துக்கலாம்'' என்றார் ரஜினி. நாமும் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சென்று, "ஸ்டில்ஸ் எடுக்க ரஜினி சார் உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கச் சொன்னார்'' என்றோம். "அட ஏன் சார் நீங்க வேற, இதுக்கெல்லாமா என்கிட்ட பெர்மிஷன் வாங்கணும். சாருக்கு ஓ.கே.ன்னா நோ பிராப்ளம்'' என்றார். அதன் பின்தான் தென்னை மரத்தடியிலும் ஆட்டோவுக்கு அருகிலும் நின்று விதம்விதமாக போஸ் கொடுத்தார் ரஜினி. இதுதான் ரஜினியின் உயர்ந்த பண்பு, டைரக்டர்களுக்கு தரும் மரியாதை. ‘"வீரா', "மன்னன்', "படையப்பா'’படங்களின் ஷூட்டிங்கின்போதும் இதேபோன்ற அனுபவம் நமக்கு ஏற்பட்டது.

அந்த "பாட்ஷா'தான் ரஜினிக்கு சூப்பர் டூப்பர் வெற்றியைக் கொடுத்து, மாஸ் ஹீரோவாக்கியது. அந்தப் படத்தின் வெற்றி விழாதான் ரஜினியை அரசியல் களம் நோக்கி இழுக்கத் தொடங்கியது. இப்போதும் டைரக்டர்களிடம் கதை கேட்கும் சில ஹீரோக்கள், "பாட்ஷா'’மாதிரி ஃபயரிங்கா இருந்தா நல்லாயிருக்கும்' எனச் சொல்லும் அளவுக்கு "பாட்ஷா'’கதைக் காய்ச்சல் இருக்கிறது.

இதேபோல் ரஜினியை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு இயக்குனர்கள் விதம்விதமாக மோல்ட் செய்திருக்கிறார்கள். ரஜினியை வைத்து அதிக படங்கள் (25) டைரக்ட் பண்ணியவர் எஸ்.பி.முத்துராமன்தான். "முரட்டுக்காளை', "போக்கிரி ராஜா', "மனிதன்', "பாயும் புலி'’ என மசாலா ஹீரோவாகவும்... "புவனா ஒரு கேள்விக்குறி', "ஆறிலிருந்து அறுபது வரை', "எங்கேயோ கேட்ட குரல்'’போன்ற படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வார்த்தெடுத்தவர் எஸ்.பி.முத்துராமன்.

ரஜினியிடமிருந்த நடிப்புத் திறமையையும் நகைச்சுவை உணர்வையும் கொண்டுவந்தவர் ராஜசேகர். முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக எக்ஸ்போஸ் பண்ணியவர் பி.வாசு. இரண்டும் கலந்த கலவையாக கொடுத்தவர் கே.எஸ்.ரவிக் குமார். ரஜினியை பிரம்மாண்டத்திற்குள்ளும் ஃபேண்டஸிக்குள்ளும் கொண்டு வந்தவர் ஷங்கர்.

மேற்சொன்னவர்கள் எல்லாம் டைரக்டர்கள் என்ற ரீதியில் ரஜினியை இயக்கிவர்கள் என்றால், ரஜினியின் அதிதீவிர ரசிகரான கார்த்திக் சுப்புராஜ்,’"பேட்ட'’படத்தில் ரஜினியை அணுஅணுவாக ரசித்து எடுத்து, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருந்தார். "கபாலி', ‘"காலா'வில் பா.இரஞ்சித், இப்போது ஏ.ஆர்.முருகதாசுடன் "தர்பார்', அடுத்ததாக "சிறுத்தை'’ சிவாவுடன் புதிய படம் என இளம் டைரக்டர்களுடனும் அடாப்ட் ஆவதுதான் ரஜினியின் சினிமா புத்திசாலித்தனம், இதுதான் வியாபார வெற்றிக்கும் பயன்படுகிறது.


"ஒரு படத்தில் கமிட் ஆகிவிட்டால், அந்தப் படத்தின் கதையையும் வசனத்தையும் முழுமையாக கேட்டுத் தெரிந்து அதை உள்வாங்கிக் கொள்பவர் ரஜினி. அன்றைய சீன்களை ஷூட் பண்ணும்போது, அதன் தன்மை, படமாக்கப்படும் விதம் அனைத்தையும் ஜீரணித்துக் கொண்டு தான் கேமராமுன் வந்துநிற்பார். கதையையும் அவரது கேரக்டரையும் சரியாக அவரது மனதுக்குள் பதிய வைத்துவிட்டால், அந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம்'' என்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

 

rajini



"பைரவி'யில் ரஜினியை ஹீரோவாக கமிட் பண்ணிவிட்டு, அவருக்கு அட்வான்ஸ் கொடுப்பதற்காக பலரிடம் கடன் கேட்டு, கடைசியாக தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் போயிருக்கிறார் கலைஞானம். படத்தின் கதையைக் கேட்ட செட்டியார், "மகேந்திரன் டைரக்ஷன்ல ரஜினியை வைத்து நான் எடுத்துக்கிட்டிருக்கும் படத்துல அவருக்கு கை இருக்காது, உங்க படத்துல கால் இருக்காது, நல்ல கூத்தா இருக்கய்யா'' என்றாராம் வேணு செட்டியார்.

"தான் நடிக்கும் படங்கள் விருதுகளை குவிக்க வேண்டும், அறிவுஜீவி விமர்சகர்கள் தமது நடிப்பை பாராட்ட வேண்டும்' என இப்போதுவரை நினைக்காதவர் ரஜினி. அதேபோல் பிற நடிகர்களைப் பற்றி, தன்னிடம் யாராவது பேச ஆரம்பித்தாலே, டக்கென பேச்சை கட் பண்ணி, அவர்களை அனுப்பிவிடுவார் ரஜினி. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் தன்னுடன் படித்த நண்பர்கள், தன்னுடைய உதவியாளர்கள், டிரைவர்கள், வீட்டுப் பணியாளர்கள் என அனைவருக்கும் வீடு வாங்கிக் கொடுத்து, அவர்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்து என அனைவரையும் மன நிறைவோடு வைத்திருக்கிறார் ரஜினி. சினிமாவிலும் தனிப்பட்ட குணநலன்களிலும் உயர்ந்த மனிதரான ரஜினிக்கு மத்திய அரசின் உயரிய விருது கிடைத்திருப்பது பொருத்தமானதுதான்.

அரசியல் ரீதியாக ரஜினியை நீண்டகாலமாக விமர் சித்து வந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உட்பட பல தலைவர்களும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சினிமாவில் அனைத்து வயதினரையும் இன்றுவரைக்கும் ஈர்க்கும் ஆற்றலே ரஜினியின் வாழ்நாள் சாதனை. அரசியலில் அப்படி ஈர்த்துவிடக்கூடிய சூழல் சரிவர அமையுமா என்பதே ரஜினி, தன் அரசியல் கட்சியை அறிவிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கு அடிப்படைக் காரணம்.

பொறுமையாகவே செயல்படும் ரஜினிக்கு, பா.ஜ.க. தரப்பில் தரப்படும் அழுத்தமும் அவசரமும் அரசியல் வட்டாரம் அறிந்ததுதான். விருதுகளில் மயங்காத மனிதரான ரஜினியை வைத்து பா.ஜ.க. தன் தமிழக அரசியல் கணக்கைத் தொடங்க முடியுமா? சஸ்பென்ஸ் தொடர்கிறது.