விமான பயணம் என்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய ஒன்று, பலருக்கு விமானத்தில் பயணம் செய்வது என்பதே கனவாக இருக்கிறது. அப்படி விமானத்திலும் சாதாரணமாக பயணிப்பவர்களுக்கு கனவாக இருப்பது என்ன என்றால் தனிஒருவனாக விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.இக்கனவு பலருக்கு சாத்தியமற்றது. ஒருவேளை மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் தனி விமானத்தை வாங்கி அதில் பயணம் செய்யலாம் அல்லது அனைத்து சீட்டுகளுக்கான டிக்கெட்டடை வாங்கி பயணம் செய்யலாம். இது போன்று இல்லாமல் சாதாரண விமான கட்டணத்தில் தனி ஒருவனாக பயணிக்க என்ன வேண்டும்? கண்டிப்பாக அதிர்ஷ்டம் வேண்டும்.
கோர்ஃபு தீவு, கிரீஸ் நாட்டிலுள்ளது. பிரிமிங்காம் நகரம் இங்கிலாந்திலுள்ளது. நண்பர் திருமணத்திற்காக இத்தீவிற்கு வந்தவர், பின்னர் பிரிமிங்காமுக்கு செல்வதற்காக கடந்த சனிக்கிழமை அன்று விமான டிக்கெட் எடுத்துள்ளார் சாத் ஜிலானி. திருமணத்தை முடித்துவிட்டு, பிரிமிங்காமுக்கு திரும்புவதற்காக கோர்ஃபு விமான நிலையத்திற்கு வந்தவருக்கு தொடக்கம் முதலிருந்தே ஆச்சரியம். விமான நிலையத்திற்கு வந்தவரை காரில் அழைத்துக்கொண்டு விமானம் ஏறும் இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கே இரு விமானி மற்றும் ஏர்ஹோஸ்டர்ஸ் குழுவும் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்பதை பார்க்க வெளியே வந்து வரவேற்க காத்திருந்தனர். ஜிலானியை வரவேற்கும் போதே, "வெல்கம் அப்போர்ட் யுவர் பிரைவேட் ஜெட் சார்" என்று ஆச்சரியத்தை தந்துள்ளனர். ஆமாம் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது. புதிய போயிங்738 வகை விமானம், மொத்தமாக 168 சீட்டுகளில் தனி ஒருவனாக பயணிக்க இருக்கிறார்.
உள்ளே வரவேற்ற உடனேயே, தன்னுடைய மொபைல் கேமராவை ஆன் செய்து வெறிச்சோடி இருக்கும் நீண்ட விமான இருக்கைகளை வீடியோ எடுக்க, பின்னர் ஏர்ஹோஸ்டர்ஸ் அனைவரும் சேர்ந்து அவருக்கு அளித்த பாதுகாப்பு செயல் விளக்கத்தையும் வீடியோ எடுத்துள்ளார். காக்பிட் என்று சொல்லப்படும் விமானி இருக்கையிலும் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். தான் தனியாக உறங்குவது, மொத்த விமானக்குழுவுடன் புகைப்படம் என்று சொகுசாக அதுவும் சாதாரண கட்டணமான 40 யூரோவில்(இந்தியாவில் ரூபாய் 3,200) 2:30 மணி நேரம் பயணித்துள்ளார். பிரிமிங்காமுக்கு விமானம் வந்து சேர்ந்ததும், அவருக்கு 60 யூரோவில் இன்னுமொரு விமான டிக்கெட் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஃபு டூ பிரிமிங்காம் விமான வழி, பயணிகள் அரிதாக பயன்படுத்துவது. அன்று வேறொருவரும் டிக்கெட் பெற்றுள்ளார், கடைசியில் அவரும் வரவில்லை என்பதால் அந்த விமானம் 28 வயதுடைய சாத் ஜிலானியின் தனி விமானமாக 2:30 மணிநேரத்திற்கு மாறியுள்ளது. அதிர்ஷ்டம் அவருக்கு உச்சத்தில் இருக்கிறது போல...