Skip to main content

கரோனா பரவல்; பயத்தை புறக்கணித்து கவனத்தை கையிலெடுப்போம்...

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸ் சுமார் 1,80,000 பேரை பாதித்துள்ளது. மேலும், இந்த வைரஸால் 7,965 பேர் உயிரிழந்துள்ளனர். மனிதர்களின் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வைரஸை கண்டு அச்சப்படுவதை தவிர்த்து, சற்று கவனமுடன் செயல்பட்டாலே இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், கரோனா பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளதாக தெரிவிக்கிறது ஆய்வு அறிக்கைகள். அதாவது இதுவரை 82,000 பேர் வரை கரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.  

 

how to protect ourself from corona virus

 

 

கரோனா எப்படி பரவுகிறது, இதன் அறிகுறிகள் என்ன என்பன குறித்த சில கேள்விகளுக்கு உலக சுகாதார அமைப்பு அளித்துள்ள பதில்கள்:

கரோனாவின் அறிகுறிகள் என்னென்ன..?

COVID-19 தொற்றின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல், உடல் சோர்வு மற்றும் வறட்டு இருமல் ஆகியவை ஆகும். மேலும் சிலருக்கு உடல் வலி, சளி, மூக்கடைப்பு, தொண்டை புண் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவையும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் லேசாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக அதிகரிக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலான மக்கள் (சுமார் 80%) சிறப்பு சிகிச்சைகள் ஏதுமின்றியே நோயிலிருந்து மீண்டு வருகிறார்கள்.

கரோனா வைரஸ் எப்படியெல்லாம் பரவுகிறது..?

வைரஸ் பாதிப்பு உள்ள ஒருவவரிடமிருந்து மற்றவர்களுக்கு இது பரவுகிறது. வைரஸ் பாதிப்பு உள்ள நபர் இருமும் போதோ அல்லது அவரின் தும்மலின்போது அவரது மூக்கு அல்லது வாயிலிருந்து வெளியேறும் திரவத்துளிகளால் இந்த நோய் பரவுகிறது. இப்படி தும்மல், இருமலின் போது வெளிப்படும் அந்த கிருமி அவரை சுற்றியுள்ள பொருட்களின் பரப்புகளில் விழுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி கிருமி பாதித்த அந்த பொருட்களை தொட்ட மற்றவர் தனது கைகளை அவர்களின் கண்கள், மூக்கு அல்லது வாய்ப்பகுதியில் வைக்கும்போது கிருமி எளிதாக பரவுகிறது. எனவே முகத்தில் கைவைப்பதை தவிர்ப்பதன் மூலம் கிருமி தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும். அதேபோல அறிகுறிகள் உள்ள நபர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் வரை விலகியிருப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 

இந்த வைரஸ் காற்றின் வழியாக பரவுமா..?

இந்த வைரஸ் பெரும்பாலும் காற்று வழியாக இல்லாமல், திரவத்துளிகள் மூலமாகவே பரவுகிறது என்று தற்போதும் வரை நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு செய்யவேண்டியவை என்ன..? 

கைகளை ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினியை கொண்டு முழுமையாக சுத்தம் செய்யுங்கள் அல்லது சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவவும்.

இருமல் அல்லது தும்மல் உடையவர்களுடன் குறைந்தது 1 மீட்டர் (3 அடி) தூரம் இடைவெளியை பராமரிக்கவும்.

கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

நீங்களும், உங்களைச் சுற்றியுள்ள மக்களும் நல்ல சுவாச சுகாதாரத்தைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருமல் அல்லது தும்மும்போது உங்கள் முழங்கை அல்லது திசு பேப்பர் மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ளுங்கள். பின்னர் பயன்படுத்தப்பட்ட திசு பேப்பர்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள். 

கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்கவும் - குறிப்பாக வயதானவர்கள், நீரிழிவு, இதயம் அல்லது நுரையீரல் நோய் இருப்பவர்கள் கவனமுடன் இருத்தல் அவசியம். 

கரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் நோய் பொதுவாக லேசானது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இதன் தாக்கம் குறைவே. இருப்பினும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது சிறந்தது. இந்த வைரஸ் பாதித்த ஒவ்வொரு 5 பேரில் ஒருவருக்கு மருத்துவமனை பராமரிப்பு தேவைப்படுகிறது. 

கையை நன்கு கழுவுதல், நல்ல சுவாச சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றி நடத்தல் ஆகியவையே கரோனாவிலிருந்து நம்மையும், நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாப்பதற்கான முக்கிய வழிகள் ஆகும். 

கரோனா வைரஸ் யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்..?

இந்த வைரஸ் யாரையெல்லாம் அதிகம் பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் அல்லது நீரிழிவு போன்றவற்றை கொண்டவர்கள் மற்றவர்களை விட அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிகிறது. 

தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

புகைபிடித்தல்.

மருத்துவர் அறிவுரையின்ற மருந்துகள் உட்கொள்ளுதல். 

விலங்குகளுடன் பாதுகாப்பற்ற தொடர்பு.

கரோனா வைரஸை கண்டு மக்கள் அச்சப்படுவதை தவிர்த்து சற்று கவனமுடன் செயல்பட்டு சுகாதாரத்தை பராமரித்தாலே நம்மையும், நமக்கு அன்பானவர்களையும் பாதுகாக்கலாம் என்பதே மருத்துவத்துறையின் முக்கிய அறிவுறுத்தலாக இருந்து வருகிறது. 

கரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண்:  044-29510500