Skip to main content

எம்.எல்.ஏ.க்களை வளைத்த ஈ.பி.எஸ்.!!! -அடுத்து என்ன நடக்குமோ? என மூத்த நிர்வாகிகள் டென்ஷன்!!!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
admk

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறுகையில், அக்டோபர் 7-ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

 

இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். செயற்குழுக் கூட்டம் நடந்த மறுநாள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. அதற்கு அடுத்தநாள் நடந்த அரசு விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. 

 

முதலமைச்சர் வேட்பாளர் 7ஆம் தேதிதான் அறிவிக்கப்படும் என்று கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்த நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடுத்து அதிமுக ஆட்சிதான், அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார். இதனால் அதிமுகவில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

இந்த நிலையில் திடீரென 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கட்சி  எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர தலைமை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எம்எல்ஏக்களில் பெரும்பாலானோர் எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

இதனிடையே தங்களுக்கு ஆதரவான எம்எல்ஏக்களுக்கு தலா 50எல் நேற்று இரவு எடப்பாடி தரப்பு விநியோகம் செய்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிமுக தலைமை நிர்வாகி ஒருவருக்கு தெரியாமலேயே அம்மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கும் கவனித்துவிட்டார்களாம்.

 

இதனை அறிந்த அந்த தலைமை நிர்வாகி, ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். இருவரும் ஒற்றுமையாக இருக்க நாம் பேசி வருகிறோம். நமக்கே தெரியாமல் இந்த விஷயம் நடந்திருக்கிறதா? என கடும் டென்ஷனில் இருக்கிறாராம். எடப்பாடி பழனிசாமியே ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் நேரடியாக பேசுவதால் அந்தந்த பகுதி மூத்த நிர்வாகிகள் அடுத்து என்ன நடக்குமோ? என டென்ஷனில் இருக்கிறார்கள் என்கின்றனர் ர.ர.க்கள்...

 

-மகேஷ்