Skip to main content

2011 வரலாற்றை திரும்ப எழுதுமா ரோஹித் படை?

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

India history return in World Cup 2023

 

என்னதான் 5 நாட்கள் ஆடப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்து கிரிக்கெட் தொடங்கப் பட்டிருந்தாலும், சில மணி நேரங்களில் முடிவு கிடைக்கும் ஒரு நாள் போட்டிகளே அதன் சுவாரசியத்தை கூட்டியது என்றால் அது மிகையாகாது. அதிலும் குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் சிறந்த அணி எது என்பதை நிரூபிக்க விளையாடப்படும் போட்டிகளில் 50 ஓவர் உலகக்கோப்பைக்கே முதலிடம். 1983 ல் கிரிக்கெட் ஜாம்பவான் அணியான வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர் எனும் உலகளாவிய சிறந்த வீரர் இருந்தும் 5 உலகக் கோப்பைகளில் இந்திய அணியால் கோப்பைக் கனவை நிறைவேற்ற முடியவில்லை.

 

தோனி எனும் மற்றொரு சகாப்தம் இணைந்த பிறகே 2011ல் 50 ஓவர் ஒரு நாள் போட்டி அணிகளில் சாம்பியன் என்ற பெருமையை மீண்டும் பெற முடிந்தது. ஆனால் 2015-லும் அதே சகாப்தம் தோனி இருந்தாலும், அடுத்து சிறந்த வீரர்களாக கோலி, ரோஹித் இருந்தாலும் வெற்றியை நிலை நாட்ட முடியவில்லை. 2019-ல் கூட தோனி இருந்தும் அதிசயம் நிகழவில்லை. 2011-ன் அணிதான் சிறந்த அணியா? அந்த அணி பெற்ற வெற்றியை ஏன் மறுபடி தக்க வைக்க முடியவில்லை. இந்தியாவில் உலகக்கோப்பை நடந்ததுதான் வெற்றிக்கு காரணமா? அப்படி என்றால் இந்தியாவில் நடந்த உலகத் தொடர்களில் எல்லாம் வென்றிருக்க வேண்டுமே? ஏன் நடக்கவில்லை. அப்படி எந்த வகையில் 2011-ன் அணி சிறந்தது. அந்த மேஜிக் ஏன் மற்ற தொடர்களில் நிகழவில்லை? மறுபடி 2023 ஆகிய இந்த வருடம் உலகக் கோப்பை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுவும் இந்தியாவில். இந்த அணி கோப்பை வெல்ல தகுதியான அணியா? 2011-ன் வெற்றிகர அணிக்கும், இப்போது உள்ள அணிக்கும் என்ன வித்தியாசம்? எந்தெந்த வகையில் அந்த அணியை விட தற்போதைய அணி சிறந்தது? எந்தெந்த துறையில் தடுமாறுகிறது? அதை சரி செய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். 

 

நம்பிக்கை அதானே எல்லாம்

நம்பிக்கை எவ்வாறு ஏற்படும். ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தே ஏற்படும். 2011 இல் தோனி சீனியர் வீரர்களை ஒதுக்கியது, அணித் தேர்வு என்று சலசலப்புகள் இருந்தாலும், சச்சின் எனும் பெரிய சீனியர் வீரரே இணக்கமாக செல்லும் போது நாமும் அதையே பின்பற்றுவோம் என்று மற்ற சீனியர் வீரர்களும் முடிவெடுத்தனர். 28 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்லும் வேட்கையில் அணியாக ஒன்றிணைந்திருந்தாலும், எல்லோருக்கும் சச்சினுக்காக கோப்பையை வென்று தர வேண்டும் என்ற வேட்கையும் உடன் இருந்தது. அந்த உறுதியான மனநிலை ஒவ்வொரு ஆட்டத்திலும் பிரதிபலித்தது.

 

India history return in World Cup 2023

 

இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் 2011-ன் அணியை விட 2007 உலகக்கோப்பை அணி வலிமை வாய்ந்தது. அனுபவம், இளமை என்று சரியான விகிதத்தில் இருந்த அணி. ஆனால் லீக் சுற்றிலே வெளியேறியது. காரணம் மனநிலை. கிரேக் சாப்பல் எனும் கிரேட் மேன் செய்த அரசியல் வீரர்களின் தன்னம்பிக்கையை வெகுவாக குறைத்ததாக அப்போது பரவலாக பேச்சுகள் இருந்தன. ஒரு அணியாக சரியான மனநிலையில் இல்லை என்பதை சச்சின் கூட தனது டாக்குமெண்டரியில் கூறியிருப்பார். 2019 உலகக்கோப்பை போட்டியில் கோலி தலைமையிலான அணி ஒரே மனநிலையில் இருந்தபோதும், அரை இறுதி வரை இந்தியா வந்ததும் மீண்டும் கோப்பை என ரசிகர்கள் கனவு கண்டு இருந்த நேரம் தோனியின் ரன் அவுட் கோப்பை கனவை தகர்த்தது. 

 

நாம்ம யாருங்குறது முக்கியம் இல்லை; நம்மலால என்ன முடியும்-றதுதான் முக்கியம்

 

India history return in World Cup 2023

 

ஒரு அணி வெற்றி பெற  சரியான வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.  2011 உலகக்கோப்பை அணித் தேர்வு சரியான நடைமுறையில் இருந்தது. சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைத்தது.  அப்போது சிறந்த வீரர்களாக இருந்த இர்ஃபான் பதான், ரோஹித் கூட அணியில் சேர்க்கப்படவில்லை. காரணம் அவர்களின் அப்போதைய ஃபார்ம். ஆனால் தற்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் வீரர்களை அடிக்கடி மாற்றுவது, சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாததும், சூர்யா அணியில் இருப்பதும் , சஹால் புறக்கணிக்கப்பட்டதும் அணித் தேர்வில் உள்ள குளறுபடியை காட்டுகிறது. நாம் சிறந்த வீரர் என்ற பெருமையைவிட அந்த சூழலில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதே முக்கியம். இதிலும் 2011 அணி சிறப்பானது. அப்பொழுது சிறப்பாக விளையாடிய வீரர்களே வாய்ப்பு பெற்றனர். பிரபல வீரராக இருந்தாலும் திறமைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

 

எறங்கிட்டா ஜெயிக்கனும் ஜெயிச்சாகனும்

 

 India history return in World Cup 2023

 

ஒரு அணியாக ஒரு குறிப்பிட்ட இலக்கை வைத்துக் கொண்டு போராடி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற தீர்க்கமான மனநிலை வேண்டும். 2011 உலக கோப்பையில்  லீக் சுற்றில் சீனியர் வீரர்கள் சச்சின், சேவாக் சிறப்பாக செயல்பட்டாலும், நாக் அவுட் முறையில் நடந்த காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களே முக்கியமானது. காலிறுதியில் ஆஸியின் 260ஐ துரத்தும் போது 187-5 என்ற இக்கட்டான சூழலில் இளம் வீரரான ரெய்னா பொறுப்புடன் யுவராஜுடன் இணைந்து வெற்றி பெற வைப்பார். அதே போல அரையிறுதியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 206-5 என்ற நிலையில் டெயிலெண்டர்களை வைத்து 260 என்ற கெளரவமான ஸ்கோர் வர உதவியிருப்பார் ரெய்னா. யுவராஜ் பல ஆட்டங்களில் தன் கேன்சர் வலியையும் பொறுத்துக் கொண்டு பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் கிட்டத்தட்ட எல்லா ஆட்டங்களிலும் சிறப்பித்திருப்பார்.

 

சச்சின் அனுபவ வீரராக காலிறுதி மற்றும் அரையிறுதி ஆட்டத்தில் அரை சதம் கடந்து தன் முத்திரையை பதித்திருப்பார். ஜாஹீர் கான், நெஹ்ரா, முனாஃப் படேல், ஶ்ரீசாந்த் என்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஹர்பஜன், சாவ்லா, அஷ்வின் என சுழற்பந்து வீச்சாளர்களும் சுழற்சி முறையில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக அளித்து இருப்பர். இறுதி ஆட்டத்தில் கோலியின் அந்த 35 ரன்களும் முக்கியமானது. சச்சின், சேவாக் என்று இரு ஜாம்பவான்கள் ஆட்டம் இழந்த பிறகு ஒரு இளம் வீரராக இறுதி ஆட்டத்தின் அழுத்தத்தை எதிர்கொண்ட விதம் பாராட்டத்தக்கது. காம்பிர் எடுத்த 97 ரன்கள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. கடைசியாக தோனி, மற்ற ஆட்டங்களில் பெரிதாக தன் திறமையை காட்டவில்லை என்றாலும், இறுதி ஆட்டத்தில் பொறுப்பை தன் மேல் சுமந்து, கோப்பையை கையில் ஏந்தினார். இப்படி ஒரு அணியாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீர்க்கமான மனநிலையே அந்த வரலாற்று வெற்றியை பெற்றுத் தந்தது.

 

வரலாறு திரும்ப ரோஹித் அன் கோ செய்ய வேண்டியது

 

India history return in World Cup 2023

 

ஒரு மைல்கல் வெற்றியை திரும்ப பெற ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம். ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக மூன்று முறை கோப்பை வெல்ல காரணம் வீரர்களிடையே இருந்த ஒற்றுமை. ஒரு சிறிய சலசலப்பு கூட அணியில் இருந்து எழாது. தற்போதும் உலகத்தில் சிறந்த வீரர்கள் பலரை வைத்து இருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு குழுவாக நேர்த்தியான நடைமுறையை பின்பற்றுகின்றனர். அதுபோல ஒரு அணிக்குள் பல அணிகளாக பிரிந்து கிடக்காமல் குழுவாக இணைய வேண்டும். 12 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சொதப்பும் அணி என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முனைப்பு வேண்டும்.

 

ஐசிசி தொடர்களில் கலக்கும் தவான் இல்லாத குறையை கில் போக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் 2011 காம்பிர், கோலி, யுவராஜ், ரெய்னா போன்று தற்போது ஷ்ரேயாஸ், ராகுல், இஷான், ஹர்திக் விளையாட வேண்டும். ஷ்ரேயாஸ் அந்த பொறுப்பை சிறப்பாக செய்து வருகிறார். இஷான் மிடில் ஓவர்களில் பொறுமையாக விளையாடி அதிரடி காட்ட வேண்டும். சூர்யா ஸ்ட்ரைக் ரேட்டில் ஆர்வம் காட்டாமல் ஸ்ட்ரைக் ரோடேட் செய்வது எப்படி என்று கோலியிடம் கற்றுக் கொள்ள வேண்டும். தேவையான நேரங்களில் அதிரடி காட்ட வேண்டும். 2011 ஐ விட இந்திய அணி தற்போது பந்து வீச்சில் சிறந்து விளங்குகிறது. பும்ரா, சமி, சிராஜ், அஷ்வின், குல்தீப்  என தலை சிறந்த பவுலர்கள் உள்ளனர். எனவே பேட்டிங்கில் தான் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தவறான ஷாட்கள் அடித்து அவுட் ஆவதை தவிர்க்க வேண்டும். தன் தவறால் அவுட் ஆவதை விட எதிரணி பவுலர்களின் துல்லியத்தால் தான் விக்கெட்டை இழந்தோம் என்ற அளவிற்கு வீரர்கள் தங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்த வேண்டும்.

 

India history return in World Cup 2023

 

ஆசிய கோப்பையின் லீக் சுற்றை போன்று பாகிஸ்தான், இலங்கையிடம் சாதனை வெற்றி பெற்று விட்டு வங்கதேசத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்ததைப் போல செயல்படக் கூடாது. ரெய்னா, யுவராஜ் போன்று பொறுப்பை தலைமேல் வைத்து கோப்பை எனும் கனவை நினைவாக்க வேண்டும். லீக் சுற்றில் சில தவறுகள் இழைத்தாலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் துல்லியமாக செயல்பட்டு கோப்பையை தூக்க வேண்டும் என்ற வேட்கை வேண்டும். தோனி கூறியதைப் போல கிரிக்கெட் என்பது ஒரு மைண்ட் கேம். எனவே இந்திய மக்களுக்கு வெற்றி எனும் மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்ற உள்ளத் திடம் இங்கே முக்கியம். தோனி படையைப் போன்று ரோஹித் படையும் வெற்றி நடை போட வாழ்த்துகள்.

 

- வெ.அருண்குமார்